த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 46 வது செயற்குழு
05-10-2012 வெள்ளிக்கிழமை சிஹாத்தில் அமைந்துள்ள பண்ணையில் விமரிசையாக நடைபெற்றது.
கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் அபிராமம் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் கூட்டம் சரியாக காலை 10 :15 மணி அளவில் தொடங்கியது. சிஹாத் கிளைத் தலைவர் கோவிந்தக்குடி சகோ. அஹமது கபீர் அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பொறியாளர் அபிராமம் அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் நமது இயக்கம் சமுதாயத்தின் மீதும், மார்க்கத்தின்மீதும் பற்றுதலுடன் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை
விரிவாக எடுத்துரைத்தார்.
உதாரணமாக கடந்த ரமளானில் தாயகத்தில் பெருநாள் கொண்டாட்டத்தை எதிர்நோக்கி இருந்த தருணத்தில் காட்சி ஊடகத்தின் மூலம் பரபரப்பை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தி பீதிக்குள்ளாக்கப்பட்ட (மருதாணி ஒவ்வாமை) சமயத்தில், உடனடியாக களத்தில் இறங்கி ஆய்வுசெய்து இது வெறும் வதந்தி என மக்களிடம் எடுத்துரைத்தையும், பர்மா மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதையும், அறிக்கைகள் வெளியிட்டதையும், செப்டம்பர் 1 ம் தேதி இராமநாதபுரத்தில் எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத மாபெரும் மீனவர்கள் வாழ்வுரிமை மாநாடு நடத்தி மீனவர்களின் நன்மதிப்பை பெற்றதையும், நமது உயிரினும் மேலான
எம்பெருமானார் (ஸல்) அவர்களை ஆபாசமாக சித்தரித்து படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்க யூதனையும், அதற்கு துணை நின்ற அமெரிக்க வெளிஉறவு அமைச்சரின் நிலைப்பாட்டையும் கண்டித்தும், அதை வெளியிட்ட YOU TUBE நிர்வாகத்தினரை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தி நமது எதிப்பை வெளிப்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.
மேலும் நமது சார்பாக வெளியிடப்படும் மக்கள் உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான செலவீனங்கள் மூலம் நிதிபற்றாக்குறை உள்ளதையும் சுட்டி காட்டினார்.
அதை தொடர்ந்து நமது மண்டலத்தின் அணிகளின் பொறுப்பாளர்கள் தங்களது அணியின் செயல்பாடுகளை எடுத்துரைக்க அழைக்கப்பட்டனர்.
வர்த்தகர் அணி சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ. இபுராஹீம் ஷா அவர்கள், நமது இயக்கத்தின் நிதியை எவ்வாறு சேகரிக்கவேண்டும் எனவும், அதற்கு அனைத்து கிளைகளும் தங்களது பகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்து நிதிதிரட்டவேண்டும் என கேட்டுகொண்டார்.
அடுத்து விவகாரங்கள் அணி பொறுப்பாளர் மண்டல துணைச் செயலாளர் சகோ. சீனி முஹம்மது அவர்கள் தாங்கள் செய்த சேவைகளில் முக்கியமானதாக அல்ஹசாவில் மரணமடைந்த விடுதலை சிறுத்தைகளின் உறுப்பினர் திரு பெரியநாயகம் உடலை தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்து அனுப்பிவைத்ததையும், குவைத்திலிருந்து ஓட்டுனராகஅல்ஹசாவிற்கு வந்த சகோ. கலீல் ரஹ்மான் அவர்கள் எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்ட்டபோது,
அவரை இங்கேயே நல்லடக்கம் செய்ய பட்டதையும்,அல்ஹசாவில் மரணமடைந்த ஆந்திராவை சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரரின் உடலை தாயகம் அனுப்பியதையும், அல்ஹசாவில் தீ விபத்தினால் மரணமடைந்த உத்தர் பிரதேஷ் சகோதரர் சந்திர கான் அவர்களின் உடல் அடக்கம் செய்ததையும், அல்கோபாரில் மரணமடைந்த இராஜகிரியை சார்ந்த சகோ. முஹம்மது ஹனீப் அவர்களை அடக்கம் செய்ததையும், மற்றும் இன்னும் பல விவகாரங்களில் தீர்வை தேடித்தந்தத்தையும் குறிப்பிட்டார்கள்.
அடுத்து நமது கிழக்கு மண்டல உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், அதை இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும், காலாவதியான உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டியும் மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மருத்துவ அணி வரும் வாரம் 12 -10 -2012 அன்றுஅல்கோபார் கிளை - கிங் பாஹத் மருத்துவ மனையுடன் இணைந்து நடத்த இருக்கும் இரத்த தான முகாம் குறித்து அறிவிப்பும், அதற்கு செயல் வீரர்களின் ஒத்துழைப்பையும் மண்டலத் தலைவர் கேட்டுகொண்டார். தொடர்ந்து நாம் நடத்திகொண்டிருக்கும் www.tmmk-ksa.com வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடி எடுத்துவைப்பதையும் அதை மேலும் வெற்றிகரமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.
தொடர்ந்து தர்பியா அணியின் பொறுப்பாளர் பொறியாளர் ஜகரியா அவர்கள் கடந்த காலங்களில் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை தீவிரவாதியாக சித்தரித்து கார்டூன் வரைந்து தங்களது வெறுப்பை வெளிப்படுத்தியவர்கள், தற்போது திரைப்படமாக வெளியிட்டு வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். இவற்றை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்றால் எம்பெருமானாரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொண்டு, அதை நம்வாழ்வில் நடைமுறைப்படுத்தி பின்னர் அவர்களின் சிறப்பை மற்றவர்களுக்கு நாம் எடுத்து கூறவேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நமது கிளைகளின் செயல் பாடுகளை மண்டல பொதுச் செயலாளர் சகோ. இம்தியாஸ் அவர்கள் கிளைவாரியாக எடுத்துவைத்தார்கள்.
மேலும் அவற்றை முறைப்படுத்தும் முகமாக நாம் முன்னர் வழங்கியிருந்த கிளைக் கூட்ட பதிவு புத்தகத்தை முறையாக பதிவு செய்துள்ளார்களா என பரிசீலித்து அவற்றில் உள்ள குறை, நிறைகளை எடுத்துவைத்தார்கள். பின்னர் மண்டலம் சார்பாகநடத்திய நிகழ்ச்சிகளையும், மண்டல பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் எடுத்துரைத்தார்.
இத்துடன் முதல் அமர்வு ஜும்ஆ தொழுகைக்காக முடித்து கொள்ளப்பட்டது.
ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் தொடங்கிய இரண்டாம் அமர்வில் தாயகத்திலிருந்து மாநிலத்தைலவர் மௌலவி ஜே. எஸ். ரிபாயி அவர்கள் அலைபேசியில் உரை நிகழ்த்தினார். அதில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில செயற்குழு பற்றியும், அதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டங்களையும்,
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக நாம் நடத்திய ஆர்ப்பாட்டங்களையும், அதை தொடர்ந்து ஏற்ப்பட்ட வன்முறையில் கைதாகிய நமது தொண்டர்களின் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகளையும், காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்தின் போக்கை கண்டித்து ஓசூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையும், கடந்த ரமளானில் சுமார் 1.25 கோடி ரூபாய் பித்ரா வசூலித்து தமிழகமெங்கும் விநியோகித்ததையும் சுட்டிக்காட்டினார்கள்.
இயக்கத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் வல்லோனிடம் அதிகமதிகம் து ஆ செய்ய வேண்டினார். இயக்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க நல்ல பல ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொருளாளர் வரவு, செலவு கணக்கு செலவுகளை சபையோரிடம் சமர்ப்பித்தார் பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது.
தொடர்ந்து மூன்றாம் அமர்வில் மௌலவி ஆத்தங்கரை அலாதீன் பாக்கவி அவர்கள் த.மு.மு.க. அவசியத்தையும் அதன் தலைவர்களும், தொண்டர்களும் தன்னலமற்று அயராது மக்கள் சேவை செய்துகொண்டிருப்பதை பட்டியலிட்டு கூறினார்.
மேலும் ம.ம.க. வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சேவைகளையும், அவர்கள் ஆற்றும் பணிகளையும் எடுத்து கூறினார் அத்துடன் நாம் மட்டுமே மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதலில் களத்தில் இறங்கி போராடுபவர்களாக உள்ளோம் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்தார்.
அதுபோல் நமது அடிப்படை தாஃவா வாக இருக்கவேண்டும் எனவும் நம் இயக்கத்தில் உள்ள சிலர் அடிப்படை தெரியாமல் இருப்பதையும் அவற்றை நாம் அவர்களுக்கு எத்திவைக்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்கள்.
தொடர்ந்து நமது கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு கிளைவாரியாக அதன் பொறுப்பாளர்கள் பணிக்கப்பட்டனர்.
அனைத்து கிளைப் பொறுப்பாளர்களும் ஆர்வமுடன் பல ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக அனைவரும்,
மாநிலத்தில் மாவட்ட அளவில் நிர்வாகிகளுக்கான தர்பியா வகுப்புகள் நடத்துவது பற்றியும், நமது மூத்த தலைவரின் தம்மாம் வருகையின் போது கையளிக்கப்பட்ட கோரிக்கைகளின் நிலவரம் குறித்தும், தமிழகத்தில் நடைபெற்ற கிளைத்தேர்தல்கள் குறித்தும், கருத்துக்களை பதிவு செய்தனர்.
மேலும், மக்கள் உரிமை பத்திரிக்கையின் தரம் குறித்தும், உள்ளூர் செய்திகளை அதிக்கப்படுத்துவது குறித்தும், tmmk.inவலைதளத்தில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளின் தொடர்பு எண்களை வெளியிடுவது குறித்தும், தமிழகத்தில் அவசர இரத்த தேவைக்கு அணுக வேண்டிய பொறுப்பாளர்களின் விபரங்களை பத்திரிக்கையில் வெளியிடுவது குறித்தும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், தகவல் தொடர்புக்கு மின்னஞ்சலை மட்டுமல்லாமல், அலைபேசியிலும் தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், ஆலோசனை அமர்வுகளில் அனத்து மட்டங்களிலும் முண்ணாள் நிர்வாகிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும்,tmmk-ksa வலைத்தளத்தில் பின்னூட்ட வசதிகள்; மற்றும் பழைய செய்திகளை தேடும் வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும், தலைவர்களின் கழக நிகழ்ச்சிகள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிவர ஆவண செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
தவிர, சிறுபான்மை அந்தஸ்துள்ள முஸ்லிம் பள்ளிகளில் அரபி மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும், சாத்தியப்பட்டால் அரசு பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டுமென்றும், மின்கட்டணத்தை மாதாமாதம் வசூலிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து தமிழக ம.ம.க. துணைத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் கிளை நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் அத்துடன் அவர்களின் ஆலோசனைகளை தங்கள் நிர்வாகக்குழுவில் வைத்து பரிசீலிப்பதாகவும் கூறினார்.
இறுதியாக மண்டலத் துணைச் செயலாளர் சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இனிதே நிறைவுற்றது.
எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே.
செய்திதொகுப்பு:
அப்துல் குத்தூஸ்
|