அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
- தமுமுகவின் வரலாறு
வரலாற்றின் திசைகளை தீர்மானித்த பேரியக்கங்களில் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 1995 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் முதல் இருபதாம் ஆண்டில் தன் வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கிறது.
அந்த நாட்களை திரும்பி பார்க்கிறோம். அது மிகவும் இருள் சூழ்ந்த சூழல். 1992 டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சமுதாயமும், நாடும் நெருக்கடியில் சிக்கி; அதன் தொடர் பரபரப்புகள் ஓயாத காலக்கட்டம். அடக்குமுறை சட்டமான தடாவின் கீழ் நாடு முழுக்க முஸ்லிம்கள் கைதாகிக் கொண்டிருந்தார்கள். வஞ்சிக்கப்பட்ட சமூகம், தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
பல கட்சிகளும், அமைப்புகளும் அப்போதும் செயல்பட்டன. ஆனால் பிரச்சனைகளின் ஆழத்தை அந்த தலைமைகள் உணரவில்லை. அதை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளிலும் அவர்களுக்கு அனுபவம் இல்லை. சமுதாயமோ, ஒரு பேரியக்கத்தின் வரவை எதிர்பார்த்த வண்ணமிருந்தது. அனலும்; புயலும் சுழன்றடித்தபோது, ஒரு பாதுகாப்பு மையம் அவர்களுக்கு தேவைப்பட்டது.
- வருகை
வெறிச்சோடிக்கிடந்த சமுதாய வீதிகளில், போர்க்குரல் எழுப்பி புறப்பட்டு வந்தது தமுமுக!
- காவல்துறைக்கும், காவல்காரனுக்கும் வேறுபாடு தெரியாது.
- காக்கி நிறத்தை பார்த்தாலே நடுங்கும் நிலைமை
- ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்த தெரியாது.
- அரசு நிர்வாகங்களை அணுகும் விபரம் புரியாது.
வீதியில் கூடும் வீரத்தையும், விவேகத்தையும் பெறாத காலம்.
ஜனநாயகத்தின் இயல்புகளையும், சட்டம் வழங்கிய உரிமைகளையும் நுகராத சமுதாயத்தில் தமுமுவின் அதிரடியான களமாடல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
பாபர் மஸ்ஜித் மீட்புக்கான போர்க்குரல், தடா சட்டதிற்கு எதிரான எச்சரிக்கை, இட ஒதுக்கீட்டிற்கான உரிமை முழக்கம் என களத்தை தயார் செய்து போர்வீரர்களை முடுக்கிய அதன் வேகம் பெரும் அதிர்வுகளை உருவாக்கியது.
அப்போது மஹல்லாக்கள், மஸ்ஜிதுகள், திருமண வீடுகள், சந்தைகள், வீதிகள், கடைத் தெருக்கள் என எங்கெங்கும் இப்புதிய அமைப்பின் நகர்வுகள் குறித்தே மக்கள் பேசினர்.
இலட்சிய முழக்கங்களை தாண்டி, வட்டார பிரச்சனைகளையும் தமுமுக கையிலெடுத்து வீதிகளில் இறங்கியது. காவல்துறை அராஜகங்கள், அரசியல்வாதிகளின் சுரண்டல்கள், அதிகாரிகளின் பாரபட்சங்கள், ரவுடிகளின் அத்துமீறல்கள் என அநீதிகளுக்கு எதிராகவும்; மறுபுறம் அதிகார வர்க்கத்திடமிருந்து நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காகவும்; ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முற்றுகை போராட்டம், கண்டன சுவரொட்டிகள் என வியூகங்கள் வகுக்கப்பட்டு சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டன.
- சமுதாய_ஆதரவு
அப்போதெல்லாம் இப்போது போல கூட்டம் வராது. இருநூறு, முந்நூறு பேர் என்பதே பெரிய கூட்டமாக கருதப்படும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, நாகை, திருவாரூர் என சில மாவட்டங்களில்தான் மற்ற மாவட்டங்களை விட செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
பிற சமுதாய மக்கள் எல்லாம் சாலைகளில் இறங்கி போராடுவதை வேடிக்கை பார்த்த சமூகம், தன் பிள்ளைகள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பரிப்பதை எண்ணி பேரானந்தம் கொண்டது. அச்சு ஊடகங்களில் அது குறித்த செய்தியை பார்த்து மக்கள் பூரித்தனர். நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில், சாலையோராத்தில் ஜமாத்தாக தொழுகையை நிறைவேற்றும் புகைப்படங்கள் காண்போரை சிந்திக்க வைத்தன.
சென்னை இம்பீரியலில் நடைபெற்ற மாநாடு உற்சாகத்தைக் கொடுத்தது. பச்சை நிறத்தையே பார்த்து பழகிய சமுதாயத்திற்கு கறுப்பு&வெள்ளை கொடிகள் தனித்துவத்துடன் கூடிய புதிய அடையாளத்தை நிறுவியது.
மேலப்பாளையத்தில் தடாவுக்கு எதிராக நடந்த முதல் பேரணி முன்னுறையாக அமைந்தது. அதுவே புதிய எழுச்சிக்கு அடிகோலியது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது பேரணி தலைநகர் தொடங்கி தமிழகம் வரை கவனத்தை ஈர்த்தது. அன்று வந்தவர்கள் சில ஆயிரம்தான். ஆனால் லட்சம் பேர் ஏற்படுத்திய தாக்கத்தை அவை எதிரொலித்தன.
இதன் ஆரம்ப காலம்
மின்னலும், மின்சாரமும் கலந்தவை
பேரிடிகளை உள்வாங்கி
இப்பேரியக்கம்
புன்னகையை
சமுதாயத்திற்கு பரிசளித்தது!
இதனிடையே சமுதாயத்தின் பிரபலங்களாய் வலம் வந்தவர்களின் கடும¢விமர்சனங்களும் நாலாப்புறமும் தாக்கின. கொசுக்கடிகள் யானையை சலனப்படுத்துவதில்லைதானே...!
சமுதாயம், தமுமுகவின் வீரியமிக்க பணிகளை கண்டு நாள்தோறும் பேராதரவை பெருக்கிக் கொண்டே போனது. பொறாமை போதையில் இருந்தவர்களின் பொல்லாங்குகள் முனை மழுங்கின.
- டிசம்பர்_6_களங்கள்
டிசம்பர் - 6 களங்கள் யாவும் உணர்ச்சிமயமாய் அமைந்தன. அவையெல்லாம் தீப்பற்றிய பொழுதுகளாகும்.
1996 டிசம்பர் 6ல் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 1997 டிசம்பர் 6ல் நடைபெற்ற தடையை மீறிய சென்னை பேரணி, 1998 டிசம்பர் 6ல் நடைபெற்ற முதல்வர் வீடு முற்றுகைப்போராட்டம் ஆகியன மயிர்க்கூச்சரியும் சாகசங்களை உள்ளடக்கிய நிகழ்வுகளாகும். இதில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் முதன்முதலாக, பெரும் தடைகளை உடைத்து வெற்றிகண்ட போராட்டமாகும்.
1997 டிசம்பர் 6
1997 டிசம்பர் 6 அன்று சென்னையில் பேரணி மாநாடு நடத்தப்படுமென தமுமுக அறிவித்தது. அந்தப் போராட்டம் பாபரி மஸ்ஜித் பிரச்சனையில் நீதிக் கேட்பதற்காக வேண்டி மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரியும் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்திற்காக தமிழகம் முழுவதும் கடுமையான பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னை மண்ணடி மூர் தெருவில் இருந்து தொடங்கி கடற்கரை சீரணி அரங்கு வரை பேரணி நடத்துவதற்கான பாதையாக நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளராக இருந்தவர் திரு.ராஜகோபாலன். அவர் பேரணி&மாநாடு தொடர்பாக பேச வேண்டும் என்று தமுமுக நிர்வாகிகளை அழைத்தார். பேரணி வேண்டாம் மாநாடு மட்டும் நடத்துங்கள் என்று முதலில் சொன்னவரிடம் பக்குவமாகப் பேசி பேரணி மற்றும் மாநாடு நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது.
எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்துவிட்ட சூழலில்தான் கோவையில் நவம்பர் 28, 1997 இரவு பெரும் கலவரம் வெடித்தது. இதனையடுத்து இடஒதுக்கீடு தொடர்பான பேரணி மாநாட்டிற்கு அனுமதி ரத்துச் செய்யப்பட்டது. எனினும் தடையை மீறி பேரணி மாநாடு நடைபெறும் என்று தமுமுக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை கைதுகள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் இருந்த தமுமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பேரணி மாநாடு நடைபெறவிருந்த டிசம்பர் 6 அன்று காலை மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்தன. தமிழகம் முழுவதும் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டது. முன் எச்சரிக்கை கைதுகள் நடைபெற்றன. தலைவர்கள், தொண்டர்கள் என ஆங்காங்கே பலர் கைது செய்யப்பட்டனர்.
வாகனங்களில் சென்னை நோக்கி வந்த தமுமுகவினர் சோதனைச் சாவடிகளில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். முஸ்லிம் பகுதிகளில் வீடு, வீடாக கைது படலம் நடந்தது. தமிழக சிறைச்சாலைகள் நிரம்பின. அதையும் மீறி சென்னையில் பர்மா பஜார் அருகே மக்கள் குழுமினர்.
பகல் 2 மணிக்கு சென்னை வடக்குக் கடற்கரை சாலை அருகே (பர்மா பஜார் அருகே) இருந்து பேரணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. மாநகரக் காவல்துறை ஆணையாளர் ராஜகோபாலன் செய்தியாளர்களிடம், மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காகம் அல்லது குருவி கூட அங்கு நுழைய முடியாது என்று அறிவித்தார்..
ஆனால் 2 மணியளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் வடக்கு கடற்கரை சாலையில் குழுமினர். காவல்துறை ஆணையாளரின் பாதுகாப்பு வளையம் தகர்ந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் குழுமினர். அவர்களை கைது செய்வதற்கு காவல்துறை திணறியது.
கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு இடம் இல்லாத நிலையில் மக்கள் அங்குமிங்கும் காவல்துறையின் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக வரலாற்றில் முஸ்லிம்களால் தடையை மீறி நடத்தப்பட்ட முதல் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். காவல்துறை வாகனங்களில் & காவலர்கள் வழிநடத்தலில் அந்தப் பேரணி நடைபெற்றது! ஆம், மிரட்டியவர்கள் மக்கள் சக்திக்கு பணிந்தனர்.!
- 1998 டிசம்பர் 6
அதுபோல் 1998 டிசம்பர் 6 அன்று மதுரையில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி கேட்டும், முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரியும் பேரணி மாநாடு நடத்துவதெனத் தீர்மானித்து அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் பேரணி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாக இந்த நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டு வழக்கம் போல் முன்னெச்சரிக்கை கைதுகள் நடைபெற்றன.
இச்சூழலில் தடையை மீறிச் சென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முந்தைய வருடத்தைப் போலவே நெருக்கடிகள், அடக்குமுறைகள் என அனைத்தையும் தமுமுகவினர் எதிர்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டுத் தடையை மீறி நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இது . பொதுவாழ்வு அனுபவமின்றி, ஒதுங்கி & ஒடுங்கி வாழ்ந்து வந்த ஒரு சமுதாயம், கொள்கைக்காகவும், கோரிக்கைக்காகவும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறைச்சாலைகளை நிரப்பியது.
- சிறைச்சாலை_அனுபவங்கள்
சிறைச்சாலைகளில் அரசியல் வகுப்புகள் எடுக்கப்பட்டன. தொண்டர் படை ஒன்று அங்கே மாணவர் படையாக மாறியது. அறிவிக்கப்படாத செயற்குழுக்கள் நடத்தப்பட்டு, அடுத்தக்கட்ட வியூகங்கள் அங்கே வகுக்கப்பட்டன.
''அரைகுறையாய் களமாட வந்தவர்கள்
முழு வீரர்களாய் விடுதலையானார்கள்
முழு வீரர்களாய் வந்தவர்கள்
தளபதிகளாய் பொறுப்புயர்வு பெற்று புறப்பட்டார்கள்
தளபதிகளாய் வந்தவர்கள் தலைவர் களானார்கள்.
காயங்கள்
அவர்களை தாலாட்டின
அவமானங்கள் முன்னேற்றின.''
வீடுகளில் கடும் எதிர்ப்புகள்! வேலை செய்யும் இடங்களில் நெருக்கடிகள்! எல்லாவற்றையும் இன்முகத்தோடு எதிர்கொண்டார்கள் இயக்கவாதிகள். இதற்கு நேர்மாறான ஆதரவுக் கரங்களும் நீண்டன.
கொட்டும் மழையில் கலையாமல் முழக்கங்களை எழுப்பி, வீட்டிற்கு செல்லும்போது தாய் ஓடிவந்து தலை துவட்டிtவிடும் சுகமான அனுபவங்கள் இளைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே கிடைத்தன. அவை இறைவன் அருளிய பாக்கியங்கள்! நினைவுப் பெட்டகத்தின் பொக்கிஷங்கள்.
- தமுமுகவின்_சாதனைகள்
பத்திரிக்கையாளர்களை சந்திப்பது எப்படி? அதிகாரிகளிடம் விவகாரங்களை எடுத்து செல்வது எப்படி? எதற்காக? எப்படி? எப்போது? போராட்டங்களை அறிவிப்பது? என்பது போன்ற நிர்வாக நுட்பங்களை ஜனநாயக வழியில் சமுதாயத்திற்கு வகுப்பெடுத்த முதல் பேரியக்கம் தமுமுகதான்.!
- 1999 ஜூலை 4ல் சென்னை மெரீனாவில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு.
- 2004 மார்ச் 21ல் தஞ்சையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பேரணி.
- 2007 மார்ச் 7ல் டெல்லியில் நடத்திய பேரணி
- 2013 ஜூலை 6ல் சென்னையில் நடத்திய தடையை மீறிய பேரணி
ஆகியன இடஒதுக்கீடு வரலாற்றில் தமுமுக பதித்த முத்திரை நிகழ் வுகளாகும்.
- டெல்லி_பேரணி
டெல்லியில் நடத்திய பேரணி தனி முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், அகில இந்திய அளவில் முக்கிய மாநிலங்களிலிருந்து சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த தேசிய தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மேடையேறி, இடஒதுக்கீட்டிற்காக முழங்கியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதற்கு முன்பும், இதற்கு பின்பும் இன்று வரை டெல்லியில் அப்படி ஒரு நிகழ்வு அரங்கேறவில்லை.
இதுபோன்ற முயற்சிகளின் பயனாகத்தான் 13.09.2007 அன்று தமிழக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை இப்பேரியக்கம் பெற்றுக் கொடுத்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.
- ஓயாத_சேவைகள்
இன்று இந்தியாவில் 115 அவசர ஊர்திகளை வைத்திருக்கும் ஒரே தன்னார்வ இயக்கம் தமுமுக மட்டுமே. ஒரு நாளைக்கு ஒரு வாகனம் மூன்று உயிர்களை காப்பதாக எடுத்துக் கொண்டாலும், தினந்தோறும் சராசரியாக 345 உயர்களை தமுமுகவின் வாகனங்கள் இறையருளால் பாதுகாக்க முயல்கின்றன எனலாம்.
வருடத்திற்கு 10 ஆயிரம் என்ற அளவில் அதன் தொண்டர்களால் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் ரத்த தானத்தை செய்கிறார்கள்.
இலவச பள்ளி சீருடைகள், வட்டியில்லா கடனுதவி மையங்கள், இலவச மருத்துவ முகாம்கள், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் என ஒருபுறமும், மறுபுறம் கூட்டுக் குர்பானி, ஃபித்ரா வினியோகம் ஆகியவற்றிலும் அளப்பரிய பங்களிப்பினை செய்கிறார்கள்.
2004ம் வருடத்திற்கு முன்பு வரை 10 லட்சத்துக்கும் குறைவான அளவில் இருந்த ஃபித்ரா வினியோகம் 2014 ரமலானில் ஒரு கோடியே 52 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
- கண்ணீர்_துடைக்கும்_உதவிகள்
1998ல் கோவை கலவர நிவாரண நிதி
1999ல் ஒரிஸ்ஸா வெள்ள நிவாரண நிதி
2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி
2002ல் குஜராத் கலவர நிவாரண நிதி
2004ல் சுனாமி நிவாரண நிதி
2014ல் முசாபர்நகர் கலவர நிவாரண நிதி
2014ல் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி (நடப்பு)
என நாடும், மக்களும் சந்தித்த தேசிய பேரிடர்களின் போது மக்களிடம் நிதியைத் திரட்டி, துயர் போக்கிய சாதனைகளும் உண்டு.
ü தமுமுகவின்_சிறப்பம்சம்
தமுமுக தனித்து விளங்குவதற்கு முக்கிய காரணம், அதன் பன்முகத்தன்மையாகும். ஒரு வெகுமக்கள் இயக்கம் சமூக சேவையிலும், சமூக உரிமை போராட்ட களங்களிலும் சம அளவில் பங்கெடுப்பதுதான் அதன் முக்கிய சிறப்பம்சமாகும். தமிழகத்தை தாண்டி அகில இந்திய பிரச்சனைகளையும் பன்னாட்டு விவகாரங்களை கையாளும் அதன் நேர்த்தி வியக்கத் தக்கதாகும். இன்று இந்திய முஸ்லிம்களின் முன்னுதாரண அமைப்பாக தமுமுக திகழ்வதற்கு இதுவெல்லாம் காரணங்களாகும்.
- உழைப்பும்_உயர்வும்
இங்கே ஆலை முதலாளிகளோ, ஜமீன்களின் பேரப் பிள்ளைகளோ பொறுப்புகளில் அன்றும்&இன்றும் இல்லை. சாமான்யர்கள் இதனை அலங்கரித்தார்கள். இப்போது அலங்கரிக்கிறார்கள். அவர்களின் நேர்மையான பண்புகளிள் காரணமாக பணிகள் நடைபெற்றன.
''முகம் பார்த்து யாருக்கும்
பொறுப்புகள் கொடுக்கப்படவில்லை
முகவரி பார்த்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை
முழக்கங்களையும், முயற்சிகளையும்
யார் முன்னெடுக்கிறார்களோ
அவர்களே பொறுப்பாளர்கள் ஆனார்கள்''
ஆம் இது எளியவர்களையும் தலைவர்களாக்கிய பேரியக்கம்.
இன்று 2014ல் இருபதாண்டில் பயணிக்கும் இப்பேரியக்கம் வெள்ளிவிழாவை நோக்கி மேலும் பல அரிய பணிகளை ஆற்றியவாறே முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இறையருளும், தொண்டர்களின் உழைப்பும், தலைவர்களின் அர்ப்பணிப்பும் இருக்கும் வரை இவ்வியக்கத்தின் பயணத்தை யாராலும் நிறுத்தமுடியாது. தடைகளை உடைத்து முன்னேறிய வரலாறு இப்பேரியகத்திற்கு உரியது.
இது புயலைத் தாங்கும் தேக்குமரம்;
குண்டூசிகள் இதனை துளைக்க முடியாது!
எம்_தமிமுன்_அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி