ஒரு கையால் முசாபஹா செய்யலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
முசாபஹா செய்வது குறித்து புஹாரி 4418 , இப்னு மாஜா 2865 போன்று ஏராளமான ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளன. அவற்றில் முசாபஹா செய்தார்கள் என்று பொதுப்படையாக தான் சொல்லப்பட்டுள்ளன.
முசாபஹா என்பதன் நேரடி அகராதி அர்த்தம், இரு உள்ளங்கையும் ஒன்றுடன் ஒன்று தொடும் வகையில் அமைவதாகும்.
ஆக, ஒரு கையால் முசாபாஹா செய்தால் தான் இந்த அர்த்தம் பொருந்தும். இரு கைகளை கொண்டு முசாபாஹா செய்தால், உள்ளங்கைகள் இணையாது, மாறாக ஒருவரது உள்ளங்கை இன்னொருவரது புறக்கையின் மீது தான் தொடும்.
ஆக, முசாபஹா என்பது ஒரு கையால் செய்வது தான் பொருத்தமானது.
அதே நேரம், இரண்டு கைகளால் (உள்ளங்கைகள் இணைகிற வகையில்) செய்வது தவறு என்று தடுக்க முடியாது. மாறாக, அவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று யாரேனும் வலியுறுத்தினால் அது பித்அத் ஆகி விடும் என்பதை தான் கவனத்தில் கொள்ள வேண்டும்..
சிலர், இரு கைகளையும் சேர்க்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எனக்கு அதஹியாத் கற்று தந்தார்கள். அப்போது எனது ஒரு கை, அவர்களது இரு கைகளின் நடுவே இருந்தது.
புஹாரி 6265
மேற்கண்ட ஹதீஸ் இவர்களது வாதத்திற்கே மறுப்பாக இருக்கிறது என்பதை இவர்கள் கவனிக்க மறந்து விட்டனர்.
ஒரு வாதத்திற்கு இது தான் ஆதாரம் என்று வைத்துக்கொண்டாலும், மேலே உள்ள ஹதீஸை அறிவிக்கும் சஹாபியின் ஒரு கையை தான் நபி (ஸல்) அவர்கள் இரு கைகளை கொண்டு பிடித்திருந்தார்கள். ஆக, இருவரும் தங்கள் இரு கைகளை கொண்டு முசாபாஹா செய்யவில்லை என்பதை இந்த ஹதீஸை வைத்தே அறியலாம்.
அதை விட முக்கியமாக, இது ஒருவருக்கொருவர் சந்திக்கிற வேளையில் செய்யும் முசாபாஹா என்று இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை. பாடம் நடத்துகிற சமயத்தில், ஒருவர் மற்றவரது இரு கைகளையும் பிடிக்கலாம் என்பதற்கு தான் ஆதாரமாக அமையும்.
சந்திக்கிற வேளையில் முசாபாஹா என்பது இரு உள்ளங்களிகளும் இணைய வேண்டும் என்பது தான் சட்டம்!
ஒரு கையால் முசாபாஹா செய்தாலே இந்த சட்டத்தை நிறைவேற்றியவர்களாக நாம் ஆகி விடுவோம்.
—Thanks:Suvanatthentral
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~