அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மீன்வளத்துறை
மானியக்கோரிக்கையில் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களில் உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மீன் வளத்துறை
மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையிலே மனிதநேய மக்கள் கட்சியின்
சார்பாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு தந்தமைக்காக முதலிலே நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திலே தற்போது நடைபெற்று வரக்கூடிய அதிமுக அரசு
மீனவர்களுடைய நலனைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களுடைய வாழ்விலே வளம்
ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஆழ்கட-லே மீன்பிடிப்பதற்காக சூரை மீன்பிடி
விசைப் படகுகளுக்காக மானியம் 50 விழுக்காடாக
உயர்த்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் மீன்வர்களுடைய பாதுகாப்பிற்காக
விஎச்எப் மற்றும் எச்எப் கருவிகளை 75 விழுக்காடு
மானியத்திலே இந்த அரசு வழங்கும் என்ற அறிவிப்பையும் நான் பாராட்டுகின்றேன்.
அதேநேரத்தில் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வியல் வாழ்வுரிமை சிறப்பான முறையிலே
பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக சில கோரிக்கைகளை இந்த அரசு தெரிவிக்க
விரும்புகின்றேன்.
மன்னார்வளைகுடா பகுதியிலுள்ள கடலோர மக்களின் முக்கிய
பிரச்சினை கடல் அரிப்பாகும், இதன்காரணமாக கடலோரத்திலே
இருக்கும் குடிசைகளில் வாழும் மீனவ மக்கள் பாதிப்படைவதுடன், அவர்களுடைய இருப்பிடங்கள் முற்றாக அழிந்துவிடுகின்றன, இதுபோல, கடலோரத்தில் இருக்கும்
கட்டுமானங்களான சாலைகள்,
மின்கம்பங்கள், கட்டடங்கள் முதலியவை அழிந்து கடலுக்குள் மூழ்கிவிடக்கூடிய
ஒரு சூழ்நிலையை பார்க்கின்றோம். இதுமட்டுமல்லாமல் கடல் அரிப்பின் காரணமாக உப்புநீர்
உட்புகுந்தால் நிலத்திடி நீர் உபயோகமற்ற தன்மையுடைதாக ஆகிவிடுகிறது. கடலோர
மக்களின் குடிநீர் ஆதாரமும் முற்றாக பழுதடையக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. எனவே, இதைத் தடுப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க
வேண்டும். அலையாத்தி காடுகளைப் பாதுகாத்து மேலும் அவற்றை உருவாக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். நீரோடி முதல் பழவேற்காடு வரையிலும் சுமார் 1078 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையிலே 608 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 15 இலட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். பல்வேறுவகையான
தொழிற்சாலைகள் நச்சுக் கழிவுகளைக் கட-ல்தான் கொட்டுகின்றன. அதுவும் குறிப்பாக, மத்திய அரசு 1991ல்
கடலோர மேலாண்மை சட்டத்தைத் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தில்கூட பல பாதுகாப்புகள்
இருந்தாலும் அதை நீர்த்துப்போகக்கூடியவகையிலே பல்வேறு திருத்தங்களை அதில் கொண்டு
வந்து இப்போது சிஆர்இசட் 2011 என்ற
ஒரு சட்டத்தை சுற்றுச்சூழல் வன இலாகா மத்திய அரசு அந்த சட்டத்தின் மூலமாக மிகப்
பெரிய அளவிலே மீனவர்களுடைய வாழ்வுரிமைக்கு இன்றைக்கு சவால் ஏற்பட்டிருக்கின்றது
என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சிஆர்இசட் 1991 ஐ
நீர்த்துப்போக வைத்தன் காரணமாகத்தான் கடற்கரை ஓரம் வணிகமயமாகக்கூடிய ஒரு சூழலில்
பல்வேறு விஷயங்கள் கூடங்குளம் அணு உலையாகட்டும், கல்பாக்கம், அணு உலையாக இருக்கட்டும், இன்னும் அனல் மின்சார நிலையங்களாக இருக்கட்டும், பல தொழிற்சாலைகள் கடற்கரை ஓரம் ஏற்படுத்தப்பட்டு அதன்
காரணமாக மீனவர்களுடைய வாழ்வுரிமை இன்றைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. 23 திருத்தங்களை கொண்டு வந்து இப்போது புதிதாக சிஆர்இசட் 2011 ஐ கொண்டு வந்திருக்கிறார்கள், மாநில அரசு இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இந்தச்
சட்டத்தை மீனவர்களைப் பாதுகாக்கக்கூடியவகையிலே, மத்திய அரசு இயற்றுவதற்கான முன் முயற்சிகளைச் செய்ய
வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பாரம்பரிய மீனவர்களுடைய பிரச்சினைகளில் தமிழகத்தின்
மிகப் பெரிய கடலோர மாவட்டமான இராமநாதபுரம் மற்றும் துôத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 136 மீனவக் கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பாரம்பரிய மீனவர்கள்
வசித்துவருகிறார்கள். மன்னார் வளைகுடா பகுதியில் இராமநாதபுரம் மற்றும் துôத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இந்த பல்லாயிரக்கணக்கான
மீனவர்கள் மீன்பிடித் தொழி-லும், அதிலே 10000 மீனவப் பெண்கள் கடல்பாசியை சேகரிக்கக்கூடிய தொழிலையும்
செய்து வருகிறார்கள் இங்குள்ள நாட்டுப் படகு மீனவர்கள் எஞ்சின் பொருத்தப்படாத
படகுகளிலும் மீனவப் பெண்கள் கடல்பாசியைச் சேகரிக்கும் தொழி-லும் மன்னார் வளைகுடா
கடல் பகுதிகளுக்கு தீவுகளுக்கு அருகிலே பல நுôற்றாண்டுகாலமாக தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள் செய்கின்ற மீன்பிடித் தொழில் முறையினாலும்
பயன்படுத்துகின்ற மீன்பிடி சாதனங்களினாலும் கடல் வனத்திற்கோ, மீன் வளத்திற்கோ, எந்தவிதமான
பாதிப்பும் ஏற்படுவதில்லை. கடல்பாசி எடுப்பதற்காக எந்தவிதமான உபகரணமும் இல்லாமல்
பாரம்பரியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை வட்டத்தில் பாம்பன் பகுதியில்
செல்லக்கூடிய இந்த மீனவப் பெண்கள் வனத் துறையினரால் தொடர்ந்து பல்வேறு
பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், 21 தீவுகளுக்குச் செல்லக்கூடாது என்று தடை உத்தரவு ஒன்று
போடப்பட்டிருக்கின்றது. அதற்குமேல் இப்போது மிதவைகளை போடக்கூடிய ஒரு திட்டம்
அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. சரியாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால்
கீழக்கரையி-ருந்து இந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி வன
இலாக்காவி-ருந்து மிதவைகள், போயஸ் என்று சொல்லக்கூடிய
மிதவைகளை மீனவர்கள் அந்தத் தீவுப் பகுதிக்குப் போகக்கூடாது என்ற நிலையில்
மிதவைகளைப் போட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அந்தப் பாரம்பரிய மீனவர்களுடைய
வாழ்வுரிமை மிகப்பெரிய கேள்விக்குரியதாகியிருக்கின்றது. இதனை அரசு உரிய முறையில
இந்தப் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய பணிகளைச் செய்ய வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்திலே 10 கடலோர
மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம், நீரியல் உற்பத்தி அதிகார
அமைப்பின் மீன்துறை இயக்குநர் அலுவலகம் மூலம் இறால் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தி
உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில்
விவசாயம் மற்றும் கடலோர நிலங்களை அழித்து இறால் தொழிற்சாலைகள் ஊக்கம் பெறுகிறது இதனை
தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீன்பிடி தடை காலத்தில் மிக சொற்பமாக இருந்த தொகையை
இந்த அரசுதான் பன்மடங்கு அதிகப்படுத்தி வழங்கியிருக்கின்றது. அதற்கு நிச்சயமாக
மீனவர்கள் இந்த அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றார்கள். இருந்தபோதிலும்கூட
அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது இப்போது விலைவாசிகள்
உயர்ந்திருக்கக்கூடிய சூழலில் இந்த அரசு மீனவர்கள் மீது நிச்சயமாக அக்கறையுள்ள
இந்த அரசு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கக்கூடிய தொகையை இன்னும் அதிகப்படுத்தித்தர
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீனவப் பெண் தொழிலாளர்களையும் மீனவர் நல
வாரியத்தின் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். நல வாரியத்தில் தனி
அலுவலகம் அமைத்து இதர வாரியம்போல் அது தொழிலாளர்களுக்குரிய வாரியத்தில்
இருக்கவேண்டும்.
நாட்டுப்படகு போன்ற பாராம்பரிய மீனவர்கள் நசித்துவரக்கூடிய
இந்தச் சூழ-ல் விசைப்படகு மீனவர்களுக்கு மானியம் கொடுக்கிறோம். அந்த அடிப்படையில்
இந்த சிறுதொழில் மீனவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மடி, கயிறு போன்ற தொழிற் சாதனங்களை மானியத்துடன் வழங்குவதற்கு
இந்த அரசு முன்வரவேண்டும்.
மத்திய அரசில் மீன்வளத்துறைக்கு என தனியாக அமைச்சகம்
இல்லை வேளாண் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகத்தான் மீன்வளத் துறை இருக்கிறது. இதனால்
நம்முடைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அது பலவகையிலே சுற்றிப் போகவேண்டிய
ஒரு சூழல் இருக்கிறது. எனவே தமிழக அரசு மத்திய அரசாங்கத்திடம் மீன்வளத் துறைக்கு
என்று தமிழகத்திலே இருப்பதுபோன்று தனி அமைச்சகத்தை அமைப்பதற்கு கோரிக்கை
வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
கடல்அட்டை பிரச்சினையில் மத்திய அமைச்சர்களிடமும், பிரதமரிடமும் நேரடியாகவே மீனவர்கள் சென்று கடல்அட்டை மீதான
தடையினை நீக்க வேண்டும் அது அழியக்கூடிய இனம் இல்லை என்பதற்கான அறிவியல்பூர்வமான
ஆதாரங்களை கொடுத்ததற்குப் பிறகும் அந்தத் தடை நீக்கப்படாதது வருத்தத்திற்குரிய
ஒன்றாக அமைந்திருக்கிறது.
கடந்த ஜுலை 16 2012 அன்று
துபாயில் ஜெபலிதுறைமுகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சேகர் என்று மீனவர்
அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் அது தவிர முனிராஜ், பன்புவான் போன்றவர்கள் மிக மோசமாக காயமடைந்திருக்கிறார்கள்
அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு கொடுத்தது என்பதிலே எந்த
சந்தேகமும் இல்லை சரியான முறையிலே சரியான நேரத்திலே அந்த உதவித்தொகையை இழப்பீட்டை
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அந்த வழக்கை சரி செய்து
உயிரிழந்த மீனவர்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும்
உரிய இழப்பீட்டை உடனடியாகப் பெற்றுத் தருவதற்கு ஆவன செய்யவேண்டும். இப்போது
அவர்கள் ஊர் திரும்பிவிட்டார்கள். ஆனால் அனாதைகளாக அந்த மீனவர்கள் இருக்கின்ற
சூழல் இருக்கிறது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் திரு.
நாராயணசாமி அவர்கள் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பûயினரால் தாக்கப்பட்டுவதற்கு காரணம் இலங்கையிலுள்ள தமிழக
மீனவர்கள் என்று தவறான செய்தியை உண்மைக்குப் புறம்பான செய்தியை ஒரு அறிக்கையாக
கொடுத்தார். இதை அவருடைய குரலாக நான் பார்க்கவில்லை. இராஜபக்ஷேவினுடைய கையாளாகா, தமிழினத்திற்கு துரோகம் இழைக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா
என்ற இலங்கை அமைச்சர் என்ன சொல்கின்றாரோ அதை அப்படியே திரு. நாராயணசாமி அவர்கள்
பேசியிருக்கக்கூடிய ஒரு சூழலை பார்க்கின்றோம். கச்சத் தீவை மீட்பதற்காக மாண்புமிகு
முதல்வர் அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும், ஆனால், அதேநேரத்தில் இப்போது
ஆட்சியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், இன்று கச்சத்தீவு வழக்கு
தொடர்பாக புதியதாக மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கக்கூடிய டெசோவின்
மூலமாக வழக்குத் தொடர போகின்றேன். என்று சொல்லக்கூடிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர்
அவர்களுக்கும் இந்த நேரத்திலே ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.
2003 ஆம் ஆண்டில் இந்தியாவினுடைய வெளிவிவகாரத் துறை
அமைச்சர் அவர்களுக்கும்,
இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர்
அவர்களுக்கும் இடையிலே ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
அந்தப்
பேச்சுவார்தையிலே மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கக்கூடிய
வர்ச்பேங் என்ற பகுதியிலே மீன்கள் அதிமாக இருக்கக்கூடியது நன்றாக கவனிக்கவேண்டும்
இது நம்முடைய இந்திய கடல் எல்லையில் இருக்ககூடிய பகுதி. அதை 3 ஆண்டுகளுக்கு இந்திய அரசு இலங்கை மீனவர்களுக்கு குத்தகைக்கு
விடுகிறது 2003 ஆம் ஆண்டில் ஆனால் அதற்குப்பிறகு அந்தப்
பேச்சுவார்தையிலேயே நம்முடைய இந்திய தரப்பு சொல்கின்றது
உங்களுடைய கடல் எல்லைப்
பகுதியிலே எங்களுடைய மீனவர்க குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இப்போது நடைமுறை
என்னவென்றால் திரு. நாராயணசாமி அவர்கள் மீனவர்களுடைய பிரச்சினை இரண்டு நாட்டு
மீனவர்களுக்கு இடையிலே எந்தப் பிரச்சனையும் இல்லை. 10 இடங்களில் இலங்கை மீனவர்கள் நம்முடைய கடல் எல்லைக்கு வந்து
மீன் பிடித்துச் செல்கிறார்கள். எந்தவிதமான அச்சுறுத்தலையும் நம்முடைய மீனவர்கள்
கொடுப்பதில்லை. அது ஒரு பக்கம் இருக்க நம்முடைய மீனவர்களுடைய வசதிக்காக வேண்டி, இலங்கைக் கடல் பகுதியில் எங்களுக்கு இடம் வேண்டுமென்று
சொல்லும்போது இலங்கை அதிகாரிகள் அதுசம்பந்தமான ஒரு திட்டத்தைத் தாருங்கள் நாங்கள்
அதைப் பரிசீ-க்கின்றோம் என்று சொன்னது 25.07.2003 அந்தப்
பேச்சுவார்த்தையில் இந்தச் செய்தி குறிப்பிலே இடம்பெற்றிக்கிறது
அதற்குபிறகு 2004ஆம் ஆண்டில் யார் டெல்லியில், மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். என்பது நமக்குத்
தெரியும், நம்முடைய கடல் எல்லையில் மூன்று ஆண்டுகளுக்கு
இலங்கை குத்தகைக்குக் கொடுத்திருக்கின்றோம், அதற்குப்பதிலாக, அவர்களிடமிருந்து குத்தகைப் பெறுவதற்கு தவறிவிட்டு
இன்றைக்கு வந்து மீனவர்களுடைய நலனை காப்பதற்காகத்தான் என்று சொல்லக்கூடியதை
நிச்சயமாக மீன்வர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக இங்கே
நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.