அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
.S.ரிஃபாயி ரஷாதி ,, மாநில தலைவர் தமுமுக அவர்கள் சிறப்பு பேட்டி !
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்பிற்கினிய கழகச் சகோதரர்கள் அனைவரும் நலம். நலம் பல விளைக...
முப்பெரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, தலைமை அறிவித்த, கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி வெற்றியடைய கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகலாக உழைத்து, ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிவர கடும் முயற்சி மேற்கொண்டீர்கள். தமிழகமெங்கும் நமது பேரணி பற்றிய பேச்சாகவே இருந்தது என்றால் மிகையாகாது.
இந்நிலையில், அரசின் வஞ்சகத்தால், முதலில் அனுமதியளித்து, கடைசி தினங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. நாம் நீதிமன்றப் படியேறினாலும், அரசின் சூழ்ச்சியும், காவல்துறையின் அநீதியுமே வென்றதால், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின் தடையை மீறுவது என்று முடிவெடுத்து, உங்களுக்கு அறிவிப்பு தந்தோம்.
இறையருளால், தடை உடைத்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு கைதானாலும், வரும் வழியிலேயே ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் 34 மண்டபங்களில் அடைக்கப்பட்டாலும், சென்னை மாநகரே ஒரு முஸ்லிமும் நுழைந்துவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப்பட்டாலும், தமுமுக தொண்டன் என்றைக்கும் போராளிதான் என்றும், சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தமுமுகதான் முதல் இயக்கம் மட்டுமல்ல, முதன்மை இயக்கம் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள்.
எந்த கமிஷனர் அலுவலகத்திலிருந்து தடையாணை பிறப்பிக்கப்பட்டதோ, அதே அலுவலகம் முன்னால் மக்கள் திரண்டதும், கமிஷனர் அலுவலக வாயில் பூட்டப்பட்டதும், நூற்றுக்கணக்கான காவலர்கள் நிறுத்தப்பட்டதும் விந்தையிலும் விந்தை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மீடியாக்களில் புறக்கணிக்கப்படும் நமது இயக்க நிகழ்ச்சிகள், போராட்டங்கள், உங்களது அயராத முயற்சியால், தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்கால் பேரணி முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது மாறிவிட்ட சூழலையே காட்டுகிறது.
பேரணித் தடையால் மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை கவனித்த திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கூட தடையைக் கண்டித்து அறிக்கை விட்டதும் நாம் கவனிக்கத்தக்கது.
தலைமையின் கட்டளைக்கிணங்க நீங்கள் செயல்பட்டதும், கைது நடவடிக்கைக்கும் கலங்காமல் பேரணியில் பங்கேற்றதும், மிகுந்த பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியதாகும்.
தலைமையின் சார்பாக உங்கள் மாவட்ட நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் ஆயிரம் உரித்தாகட்டும்.
ஜஸாக்குமுல்லாஹு ஹைரா
இறைவனுக்கும் நன்றி செலுத்துங்கள்.
அன்புக்குரிய சகோதரர்களே... பேரணியில் வெற்றிபெற்றுவிட்ட நாம், நம் ஒவ்வொருவரின் ஆன்மீக பலத்தையும் அதிகரிக்க இதோ ரமழான் வந்துவிட்டது. இதன் முழுப்பலனையும் அடைவதுதான் மாபெரும் வெற்றியாகும்.
ரமழானில் 1) பகலில் நோன்பு, 2) இரவில் சிறப்புத் தொழுகை (ஜமாத்துடன்), 3) நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க முயற்சிப்பது, 4) குர்ஆன் ஓதுதல், 5) தவறானவற்றைப் பேசுவது, பார்ப்பது, கேட்பது அனைத்தையும் தவிர்த்தல், 6) பிந்திய 10 இரவுகளில் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்குவது, லைலத்துல் கத்ர் இரவைத் தேடுவது, 7) தான தர்மங்கள் செய்வது பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா ஸதகா கொடுப்பது, அதை சேகரித்துக் கொடுக்க முயல்வது அதிகமான பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டுமென உங்களை அன்போடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
நமது தனித்தனி பணிகளும், சமுதாயப் பணிகளும் மறுமை வெற்றியை முன்னிறுத்தியே செய்யப்பட வேண்டும் என்பதை மறந்துவிட மாட்டீர்கள் என நம்புகிறோம்.
வல்ல இறைவன் நம் அனைவரின் நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக!
பாவங்கள், குற்றங்களை விட்டும் பாதுகாப்பானாக!
ரமழானின் முழுப்பலனையும் அடையச் செய்வானாக!
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக
======
குறிப்பு: இதை நகலெடுத்து ஒவ்வொருவரிடம் கொடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.