செத்த மொழிக்கு கருமாதி கொண்டாடமல் காது குத்து விழா ஏனோ?
யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அட்டவணை மொழிகளில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருத மொழி மட்டுமே வெறும் 10,000 பேர் பேசுவதாக உள்ளது. மற்ற மொழிகள் அனைத்தும் லட்சக் கணக்கான மக்களால் பேசப்படுபவை. இந்த 10,000 கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கருநாடகத்தில் மத்தூரில் சமஸ்கிருத பேச்சு மொழி இயக்கம் தோல்வி கண்டதாக செய்தி தாள்களில் வாசித்தறிந்தேன்.
சமஸ்கிருதம் என்பது இந்தோ _ ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரியக் கலாச்சாரத்தின் சின்னம்! இது குறித்து பார்ப்பனரான சூரிய நாராயண சாஸ்திரியே (பரிதிமாற்கலைஞர்) தெளிவுபடுத்திவிட்டார்.
வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு அப்புறமுள்ளது, அய்ரோப்பாக் கண்டத்தினொரு பகுதியாகிய ஸ்காந்திநேவியம் என்ற இடத்தினின்றும், ஆரியர் என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களிலும் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள துருக்கிஸ்தானம் என்ற இடத்திற்றிறங்கினர். இவ்விடம் தங்கிய ஆரியர்களே, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிலும் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ, அன்றித் தீமைக்கோ? இதனை யறிவுடையோர் எளிதிற் உணர்ந்து கொள்வார்கள். (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 22, 23)
அத்தோடு நிற்கவில்லை பரிதிமாற் கலைஞர். தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், பொருந்தாமை யறிக (தமிழ் மொழியின் வரலாறு _ பக்கம் 24) என்று கூறுகிறார் ஆய்வாளரான பரிதிமாற் கலைஞர்.
இந்தியாவின் பாரம்பரிய பெருமை மிக்க மொழி என்பதால் இந்த முக்கியத்துவம் எனக் கூற வருபவர்களிடம் ஒரு கேள்வி, ஏன் இந்தியாவின் பிற பாரம்பரிய மொழிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை.
பிராகிருதம், பாளி, மகதி, செந்தமிழ் ஆகிய மொழிகளையும் மத்திய அரசு ஆதரிக்கலாமே. இவற்றில் தமிழை தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் போய்விட்டது என்ற போதும் சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் சிறப்புக்களை பிராகிருதம், பாளி ஆகிய மொழிக்கும் வழங்கி இருக்க வேண்டாமா? அட்டவணையில் சேர்த்து கொண்டு, அவற்றுக்கும் வாரா வாரம் ஆரவாரித்திருக்க வேண்டாமா?
ஏனெனில் அவை யாவும் பௌத்த, சமண மொழிகள் இவற்றை இந்த இந்து மத பார்ப்பன மத்திய அரசு கொண்டாட முன்வராது என்பதே.
சமஸ்கிருதத்தைப் பற்றி விவேகானந்தர் கூறியிருப்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சுட்டிக் காட்டுகிறார்: மதச் சண்டைகளும்; சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் _ இருப்பதும் சமஸ்கிருத மொழியே யாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர். (மறைமலை அடிகளின் தமிழர் மதம் _ பக்கம் 24)
சமஸ்கிருதம் செத்துச் சுண்ணாம்பாகிப் போனதற்குக் காரணமே இந்தப் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; காதால் கேட்கக் கூடாது; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்திருந்தால் _ பெரும்பான்மை மக்களுக்குத் தடை விதித்திருந்தால் அந்த மொழி செத்து ஒழிவதைத் தவிர வேறு வழியில்லையே! சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை அதுதான் நடந்தது.
சமஸ் = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது என்று பொருள். டர்கிஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையே இது. கி.மு.53இல் குசான வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர்தான் சமஸ்கிருத மொழியை உருவுக்குக் கொண்டு வந்தவர். இந்த லட்சணத்தில் சி.பி.எஸ்.இ. இயக்குநர் சுற்றறிக்கையில் எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்று தம்பட்டம் அடிக்கிறார்.இன்றைய நிலையில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வட நாட்டில் உள்ள கிராமபுற மக்களிடம் திணித்து வாழ வைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது மத்திய அரசு, அதன் ஓரங்கமாகவே இந்த கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாமுமே.
1956இல் சமஸ்கிருத கமிஷன் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. பல்கலைக் கழகங்களிலும் வெளியிலும் சமஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அதன் நோக்கம். அந்தக் காவிகளின் கருத்துரைப்படியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட மத்திய சமஸ்கிருத போர்டு ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்காக அந்தக்கால மதிப்பில் பல லட்ச ரூபாய்க்குக் கொட்டி அழப்பட்டது.
1959ஆம் ஆண்டில் சமஸ்கிருத விஸ்வ பரிஷத்தின் கூட்டம் புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அதன் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது. அதில் போடப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? அரசிடம் சொல்லி _ சமஸ்கிருதப் படிப்புக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தொகையைச் செலவழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதம் அல்லாதவற்றிற்குச் செலவு செய்யக் கூடாது; அது சம்பந்தமாக சட்டங்கள் இயற்றுவதோ உத்தரவு பிறப்பிப்பதோ தடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.பி.சின்ஹா, உட்பட பலரையும் நியமித்துக் கொண்டனர். (பவன்ஸ் ஜர்னல் _23.3.1959) என்றால் அந்தப் பெரிய மனிதர்களின் தாராள உள்ளத்தைத் தாராளமாகவே தெரிந்து கொள்ளலாமே!
சமஸ்கிருதம் பேசுவோர் நாட்டில் 0_01 சதவிகிதமாக இருந்தாலும்கூட இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அந்தத் துறையை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செத்த மொழியைச் சிங்காரிக்கும் வேலையில்தானே இறங்குகிறார்கள். வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளலாமே!
ஆனால் இத்தனை கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்தும் செத்த மொழி செத்தே தான் கிடக்கின்றது கடைசி வரை பிழைக்கவே இல்லை. எதார்த்ததில் என்ன நடந்தது என்றால் கல்வி கற்ற, வசதியான பார்ப்பனர் முதற்கொண்டு நகர் புரத்து மக்கள் எல்லோரும் வடக்கில் ஆங்கிலமும், இந்தியும், வங்காளமும், பஞ்சாபியும், உருதும் கலப்படைந்த HINGLISH மொழியையே பேசி வருகின்றார்கள். பாலிவுட் தொடக்கம் ஊடகங்கள், பணியிடங்கள், கல்விச் சாலைகள் என நகர் புறத்து மக்களிடம் HINGLISH தான் தவழ்கின்றது.
இந்த HINGLISH என்பதே நாளைய வட இந்தியாவின் பிரதான பேச்சு மொழியாகவும், ஏன் இலக்கிய மொழியாகவும் வளரும் வாய்ப்புள்ளது. இதனால் தான் ஆங்கிலத்தை வெளியேற்றவும், சமஸ்கிருத மயமான இந்தியை பிரச்சாரம் செய்யவும் இந்த புதிய அரசு இறங்கியுள்ளது.
ஆனால் சடுதியில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும் ஆங்கிலத்துக்கு சாதகமாக இருப்பதால், நாளைய இந்தியாவின் பிரதான மொழியாக ஆங்கிலமே திகழப் போகின்றது. அடுதடுத்த தலைமுறையினருக்கு வசதி வாய்ப்பு பெருகும் போது அவர்களும் ஆங்கிலத்துக்கு செல்கின்றனர்.
செம்மொழிகளாக இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில், குறிப்பாக மொழி ஆழமற்ற இந்தி மொழி மாநிலங்களில் வெகு விரைவில் கல்வி மொழியாக ஆங்கிலமும், பேச்சு மொழியாக Hinglish-ம் திகழப் போகின்றது.
ஏனைய பகுதிகளில் கூட ஆங்கிலத்தின் தாக்கம் நிறைந்த வருகின்றது. தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆங்கில மொழி தாக்கு நிறைந்திருக்கின்றது. இதன் விளைவாக ஒரு காலத்தில் வேத ஆரிய மொழி எவ்வாறு திராவிட மொழிகளை தாக்கி மொழிகள் பலவற்றை உருவாக்கினவோ.
பின்னர் பிராகிருத மொழி அனைத்து மொழிகள் மீது ஆளுமை செலுத்தி மொழிகளை திரித்தனவோ.
அதே போல இன்று ஆங்கிலமும் மொழிகள் மீது தாக்குதல் செய்து மொழிகளை திரிக்கும்.
இந்த தாக்கத்தை ஒவ்வொரு மொழியும் அதன் அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் மொழியின் பலத்தினை பொருத்து எதிர்கொண்டு வெவ்வேறு சதவீதத்தில் மொழிகளை தக்க வைக்கவோ, இழக்கவோ போகின்றது.
பலமற்ற இலகுத் தன்மை மிகுந்த மொழியான இந்தி இந்த மொழிப் போரில் முதல் பலியாகி Hinglish ஆகி வருவதை பல மொழியியலாளர்கள் கவனித்து எழுதி உள்ளனர்.
ஆகையால் இன்று இந்தியை கற்றாலும் ஒரு பத்தாண்டுகளில் அந்த இந்தி எந்தளவுக்கு பயன் தரும் என சொல்ல முடியாது.
ஏனெனில் கணனிகளில் உள்ள Java, C# மொழிகளைப் போலவே இந்தி உட்பட பல மொழிகள் விரைவாக மாறும் தன்மையது. அவ்வாறு எனில் அவற்றை தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது பயன்படுத்திக் கொண்டே நம்மை update செய்ய வேண்டும். இது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மால் செய்வது இயலாது காரியம். ஏனெனில் தமிழக பேச்சு வழக்கிலோ, சமூக தளத்திலோ இந்தி அறவே கிடையாது.
இந்தியோ, சமஸ்கிருதமோ எக்கேடு கெட்டால் நமக்கு என்ன, அதனால் நமக்கு லாபமோ, நட்டமோ ஏதுமில்லை. ஆனால் அவற்றை தமிழகத்தில் திணிக்க முற்பட்டால் அதை நாம் தடுத்து நிறுத்தத் தான் வேண்டும். எங்காவது வேறு மாநிலத்தில் செம்மொழி தமிழ் வாரம் கொண்டாடுகின்றார்களே. இல்லையே, அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாட முற்படும் கூட்டம் எல்லாம் யார் என பார்த்தால் இந்துத்வா கோஷ்டியாகத் தான் இருக்கின்றது. அவர்கள் தாராளமாக கொண்டாடட்டும் வடக்கே போய் அங்கேயே செட்டில் ஆகி அங்கேயே கொண்டாடட்டும். யாரும் தடுக்கப் போவதில்லை. மத்திய அரசு செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கும் செலவிட்டு பணத்தில் ஒரு துளிப் பங்கை தமிழுக்கு கொடுத்திருந்தால் இன்று உலகின் முன்னணி மொழிகளில் ஒன்றாக தமிழ் உருமாறி இருக்கும். என்னவோ நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.
நம்மை பொறுத்தவரை தமிழை தனித் தன்மையோடு எவ்வாறு வைத்துக் கொள்ளலாம் என்பதோடு, நவீன ஆங்கிலத்தை எவ்வாறு அனைத்து கல்விக் கூடங்களிலும் புதிய தலைமுறையினருக்கு கற்பிக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
நவீன ஆங்கிலம் பொருளாதார மொழியாகவும், நவீன தமிழ் என்பது கலாச்சார மொழியாகவும் திகழச் செய்வதோடு, இரண்டையும் சரி சம அளவில் balance செய்வதில் தான் தமிழகத்தின் வெற்றி அடங்கி உள்ளது.
மேலதிக மொழிகளை அவசியம் ஏற்படுமாயின் தனிப்பட்ட வகையில் கற்கலாம், ஆனால் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி மூன்றாவதாய் ஒரு மொழியை திணிக்கத் தேவையில்லை என்பதே எனது கருத்து.
அதே போல Hinglish போல தமிழையும் Tanglish ஆக்காமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். ஆரியம், பிராகிருதம், சமஸ்கிருதம் என பல மொழி ஆதிக்கங்களை கடந்த வந்திருக்கின்றது நமது தமிழ் மொழி. அதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்களின் உழைப்பும் மொழி மீதான காதலுமே ஆகும்.
தமிழ்மொழி, எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட ஒரு இரட்டை வழக்கு மொழி. பேச்சு மொழியின் தாக்கத்தை எழுத்து மொழியில் காணமுடிகின்றது. அது மட்டு மல்லாமல் இன்றைய உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற பொருள்கள் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்பொருள்களோடு மேலை நாட்டு மொழியும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து தமிழ்மொழியின் அமைப்பிலும்,
பயன்பாட்டிலும் பல குழப்பங் களை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களின் மொழி பயன்பாட்டிலும் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. இக்காரணங்களால் இன்றைய தலைமுறையினர் எது சரியான தமிழ் என்பதைக் கண்டறிவதிலே தடுமாற்றம் கொள்கின்றார். அவர்களின் குழப்பங் களுக்குத் தீர்வு காணும் வழியாக பேராசிரியர். மா.நன்னன் அவர்கள் வரிசையாக உரைநடை நூல்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பதினோராம் நூலாக வெளிவந்துள்ள நூல் ‘செந்தமிழைச் செத்தமொழி யாக்கிவிடாதீர்.’
முக்கியமாக நமது ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா, வானொலி, பத்திரிக்கைகள் ஆகியவற்றில் ஏகப்பட்ட ஆங்கில கலப்பு மிக்க இலக்கண சுத்தமில்லாத தமிழை பயன்படுத்துகின்றார்கள், அவற்றை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். அதைச் செய்தாலே தமிழ் தானாக வாழும். யாருக்குமே புரியாத செந்தமிழில் இவர்கள் எல்லாம் ஊடகம் நடத்த வேண்டும் என நான் சொல்லவில்லை, ஆனால் குறைந்தது தேவையற்ற ஆங்கிலச் சொற்களை நீக்கி அழகாக தமிழில் ஊடகங்கள் நடத்தலாம். பெயர்சொற்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்யக் கூட வேண்டாம், ஆனால் வினைச் சொற்களைக் கூட ஆங்கிலத்தால் தமிழில் கலந்து பேசுவது தான் கொடுமை. அதை நிறுத்தவும், வழி நடத்தவும் அரசும், சமூக ஆர்வலர்களும் முயன்றாலே போதும்.
நன்றி : கோடங்கி