அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இலட்சக்கணக்கான நிராபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும்கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.
சிறையிடப்பட்டுள்ள ஒரு விசாரணைக் கைதி, அவர் செய்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சட்டப் புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தில்பாதியளவுக் காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அத்தகையோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையிடப்பட்டுள்ளஏறத்தாழ 3,000 விசாரணைக் கைதிகள் உள்ளிட்டு, நாடெங்கும் ஒரு இலட்சத்துக்கும் மேலான விசாரணைக் கைதிகள் அக்டோபருக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்என்றும், இது இந்திய நீதித்துறை ஓசையின்றி செய்துள்ள புரட்சி என்றும் ஊடகங்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.
விசாரணைக் கைதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் சட்டப் புத்தகங்களின்படி குற்றவாளிகள் அல்லர்; குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதாவது, குற்றம் புரிந்ததாக அளிக்கப்படும்புகார் அல்லது தகவலின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்.
ஏறத்தாழ 3.23 இலட்சம் பேரை அடைத்துவைக்குமளவுக்குத்தான் நாட்டிலுள்ள 1382 சிறைச்சாலைகளில் இடவசதி உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும், தற்போதுஇச்சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக – ஏறத்தாழ 3.81 இலட்சம் பேர் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறுகிறது.இவர்களில் 2.54 இலட்சம் பேர் – அதாவது, சிறைக்கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விசாரணைக் கைதிகளாவர். இந்த அளவுக்கு விசாரணைக் கைதிகளால் இந்தியச்சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்குக் காரணம் என்ன?
இன்றைய அரசியலமைப்பு முறையில் போலீசார் எந்தவொரு குடிமகனையும் பிடித்து பொய்வழக்கைச் சோடித்து சிறையிலடைக்க முடியும். குற்றவியல் சட்டப்படிபோலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும், யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்குஅளிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் போலீசார் பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப்பிடித்து வருவதென்பதும், தங்களது பதவி உயர்வுக்காகவும், சம்பளம்-சலுகைகளுக்காகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் இப்படி பல பொய்வழக்குகளைச்சோடிப்பதென்பதும் போலீசாரின் வாடிக்கையாகவே உள்ளது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாத இரகசியமல்ல.
உதாரணமாக, ஒரு சிறு திருட்டுக் குற்றத்திற்கு அதிகபட்சத் தண்டனையாக மூன்றாண்டு சிறை என சட்டம் பரிந்துரைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பல நேரங்களில்ஒரு விசாரணைக் கைதியின் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதாகக் கூறிக் கொண்டு போலீசார் இழுத்தடிப்பதாலும், நீதிபதிகள் வழக்குவிசாரணையைத் தள்ளிப்போட்டு அலட்சியப்படுத்துவதாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக் காலத்துக்கும் மேலாக – நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்குச் சிறையில்வதைபடுகின்றனர். அதேசமயம், அரசியல் பலமும் சாதிய பலமும் குண்டர் பலமும் கொண்ட மேட்டுக்குடியினரும் தொழில்முறை கிரிமினல்களும், சமூகத்தொடர்புள்ளவர்களும் விரைவில் பிணையில் வெளியேவர முடிகிறது. அல்லது சிறையிலேயே அவர்கள் அனைத்து வசதிகளோடு பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றனர்.இத்தகைய பலம் ஏதுமில்லாத சாமானிய மக்கள்தான் பிணை கிடைக்காமல் தொடர்ந்து விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வதைபடுவதோடு, சட்டவிரோதமாகநீதிபதிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளைச் செய்யுமாறு பயன்படுத்தப்படுகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் இந்த வழக்கைச் சீர்குலைப்பார், சாட்சிகளைக் கலைப்பார் என்ற நியாயமான அச்சம் நீதிபதிக்கு ஏற்பட்டால், அவர் ஒரு விசாரணைக் கைதியைநீதிமன்றக் காவலில் வைக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இப்படி எந்த அச்சத்தையும் தெரிவிக்காமல், போலீசார் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு, ஒருவிசாரணைக் கைதியை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உடனடியாக உத்தரவிடுகின்றனர். தாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றுஒருவர் நீதிமன்றத்தில் கதறியழுதாலும், அது நீதிபதிகளின் காதுகளில் விழுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், போலீசு நிலையத்தின் விரிவாக்கப்பட்ட நிலையமாகவேகீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
இப்படி இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். பலரது வாழ்க்கையும், பல குடும்பங்களும் நாசமாக்கப்பட்டதற்குஇந்நீதிபதிகள்தான் காரணம். குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல், அந்தவிசாரணைக் கைதியை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டுமென சட்டம் கூறினாலும், ஆண்டுக்கணக்கில் சிறையில் விசாரணைக் கைதிகள் வதைபடுவதற்குக்காரணமே நீதிபதிகள்தான்.
கடந்த மார்ச் 24 அன்று புழல் சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள், போலீசார் தங்கள் மீது போட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும்,
நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கக் கோரியும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். கோடைவிடுமுறையைக் கழிக்க குடும்பத்தோடு உல்லாசமாகக் கிளம்பும் நீதிபதிகள், இக்காலத்தில் தேவையில்லாமல் அப்பாவிகள் சிறையில்விசாரணைக் கைதிகளாக வதைபடுவது அவர்களை உறுத்தவில்லையா? அல்லது போலீசார் சோடித்திருப்பது பொய்வழக்கு என்பது அவர்களுக்குத் தெரியாதா? இந்தஅநீதியைத் தெரிந்தே செயல்படுத்திய முதன்மைக் குற்றவாளிகளான இந்நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? பொய்வழக்கு போட்டு சாமானியர்களை வதைக்கும் போலீசுக்குஎன்ன தண்டனை? மாதமொருமுறை கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்களுடன் சிறைச்சாலைக்கு நேரில் வந்து சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தி,நிலைமைகளைப் பரிசீலித்து அறிக்கை தரவேண்டுமென விதிகள் இருந்தபோதிலும், அவற்றை அவர்கள் தெரிந்தே புறக்கணித்து அலட்சியப்படுத்துவது எந்த வகையில்நியாயமானது?
ஒருவரைப் பொய்வழக்கில் போலீசு பிடித்துச் செல்வதும், பின்னர் கைதானவரை விடுவிக்க அவரது உறவினர்களும் நண்பர்களும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்வதும்,அதன் பிறகு நீதிபதிகள் விசாரணை நாடகமாடி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து அந்த நிரபராதியை பிணையில் விடுவிப்பதும்தான் போலீசு மற்றும் நீதித்துறையின்அன்றாட நடைமுறையாக இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட போலீசு ஆட்சேபிக்காவிட்டால்தான் ஒருவருக்குப் பிணை வழங்கிறார்கள். ஒரே நாளில் பலவழக்குகளில் பொய்சாட்சி கூறுவதற்காகவே சிலரை போலீசார் உருவாக்கி வைத்திருப்பதை தங்கள் கண்ணெதிரே கண்ட போதிலும், நீதிபதிகள் இதை எதிர்த்துவாய்திறப்பதில்லை. இது நீதித்துறைக்கும் போலீசுத்துறைக்குமிடையிலான எழுதப்படாத உடன்பாடாக நீடிக்கிறது. பொய்வழக்கு போடுவதைத் தங்களது உரிமையாகபோலீசு செயல்படுத்தி வருவதை கண்டுகொள்ளாமல், அதனை அங்கீகரிப்பது நீதிபதிகள்தான்.
இப்படி நிரபராதிகளான ஏழைகளை வதைத்துக் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இந்தத்தொழில்தான்அவர்களை வாழ வைக்கிறது. இந்த கூட்டுக் களவாணிகளின் வலைப்பின்னல்தான் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்தப் பொவழக்கிலாவது தங்களைப்போலீசார் சிக்கவைத்து விடுவார்களோ என்று நாளும் அச்சத்துடன்தான் சாமானிய மக்கள் வாழவேண்டியிருக்கிறது.
இந்தியச் சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிவதையும், அதனால் அடிப்படை வசதிகளின்றி நோய்வாய்ப்பட்டு கைதிகள் மரணமடைவதையும் பற்றி 1979-ல் முன்னாள்உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர். கன்னா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, அப்போதைய சட்ட அமைச்சரிடம் அறிக்கையும் பரிந்துரைகளும் அளிக்கப்பட்டன. ஆனாலும்அவை கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1996-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, விசாரணைக் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தார்கள்.அதன்பின்னர்,
2005-ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிணை வழங்கும் பகுதியில் 436-ஏ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ள ஒரு விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரைசொந்தப் பிணையில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படாமல் நீதிபதிகளாலேயே புறக்கணிக்கப்பட்டது.இப்போது மீண்டும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்து பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாலேயே, இந்தச் சட்டப்பிரிவை நினைவுபடுத்தி விசாரணைக் கைதிகளை விடுதலைசெய்யும் உத்தரவை அவசரமாகப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இறுதியில், விசாரணைக் கைதிகளான நிரபராதிகள் குற்றவாளிகளாகிவிட்டார்கள்! நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்யும் முதன்மைக்குற்றவாளிகளான நீதிபதிகள் கருணாமூர்த்திகளாகிவிட்டார்கள்! இதுதான் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் நீதித்துறையின் புரட்சி!
- குமார்.