அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இறைவனுடைய அருளால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினர் வினியோகிக்கும் ரூபாய் நோட்டுகளை மீறி மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

வெளிநாடு வாழ் சகோதரர்கள் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு ‘மெழுவர்த்திகள்’ சின்னத்தில் வாக்களிக்குமாறும், காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் வேண்டுகிறோம்.

வேலூர் தொகுதியில் ‘ஏணி’ சின்னத்திற்கும், சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் ‘மோதிரம்’ சின்னத்திற்கும்,

தென்காசி தொகுதியில் ‘டிவி’ சின்னத்திலும், இதர தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திலும்

வாக்களிக்குமாறு தொலைபேசி வாயிலாக உடனடியாக 
அறிவுறுத்த வேண்டுகிறோம்.


- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி




சனி, 19 ஏப்ரல், 2014

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? (நக்கீரன் ஏப்ரல் 16-18 இதழில் ம.ம.க. பொதுச்செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி எழுதிய சிறப்பு கட்டுரை)

இறைவனின் திருப்பெயறால் ...

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
(நக்கீரன் ஏப்ரல் 16-18 இதழில் ம.ம.க. பொதுச்செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி எழுதிய சிறப்பு கட்டுரை)
​·         எமது அரசியல்
நாட்டை வழிநடத்தவும், மக்களுக்கு சேவையாற்றவும், அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது.
இன்றைய அரசியல் வணிகம், சுயநலம், சாதியம், மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்; சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
• சமூக நீதி
• சமூக நல்லிணக்கம்
• சமத்துவ ஜனநாயகம்
என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை நடத்தி வருகிறோம்.
·         பயிற்சியும்- முயற்சியும்
கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த்தெடுக்கிறோம். “மக்களைத் திரட்டு - அரசியலை மாற்று” என முழங்குகிறோம்!
அவர்களுக்காக அரசியல் வழிகாட்டி முகாம்கள், பண்பு பயிற்சி முகாம்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் ஆகியவைகளை நடத்தி, ஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்; ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.
எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவாகவே, வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும், நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க்குரலாகவும், ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சி திகழ்கிறது.
போராட்ட களங்கள்
• முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம்
• காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமை
• கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் எழுச்சி
• டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள்
• கல்பாக்கம் அணு மின் நிலைய எதிர்ப்புக் களம்
• நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான யுத்தம்
• ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர்
என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரே நிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காகப் போராடி வருகிறோம்.
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது.
ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும், முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் எமது தனித்துவ அரசியலாகும்.
பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன், சிங்கள பேரினவாத ராணுவத்தில் இனப்படுகொலை செய்த துக்க செய்தி உறுதியான போது; உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது; உலகிலேயே முதலில் களமிறங்கி சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.
·         கொள்கை நிலைப்பாடு
ஃபாஸிஸம், சாதிய வெறி, மத வெறி, வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக மக்களை கட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்கிறோம்.
தோழமையை உயிராக மதிப்பதும்; பகைமையைக் கூட பக்குவமாக எதிர்கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணக்கமாகும்.
இந்தியாவின் ராஜபக்சேவாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; இலங்கையில் நரேந்திர மோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; நீதியின் நெறி பிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.
·         அனைவருக்குமான அரசியல்
உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும்பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயக பேரியக்கமாகும்.
மதச்சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச்சார்பின்மையாகும்.
ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம் என்பது, அனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையை கடைப்பிடிப்பதும், அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும்.அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.
·         விமர்சனங்களுடன் கூடிய தோழமை
மாற்று அரசியலுக்காக குரல் கொடுக்கும் நாங்கள், களங்களில் சமூக நீதிக்காகவும்; சமூக நல்லிணக்கத்திற்காகவும்; சில சமயங்களில் சில சமரசங்களை செய்துகொள்வது தவிர்க்க முடியாததாகிறது.
இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும், கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.
நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லை; ஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடிய, தோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும், தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.
திராவிட இயக்க சிந்தனைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், இடதுசாரி & முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலைப் பேணுகிறோம்.
·         அகண்ட பார்வை
ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு பெரு நிறுவனங்களின் சுரண்டல், கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள், இயற்கை&சுற்றுச்சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம்.
வணிக அரசியல், தேர்தல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள், தலித்துகள் - பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரசு வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.
·         நம்பிக்கையும் - கோரிக்கையும்
ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு: அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு: எமது களப்பணிகள் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆலை முதலாளிகளும், பண்ணை ஜமீன்களும், பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.
தூய்மையான எண்ணங்களோடும், நேர்மையான அணுகுமுறைகளோடும், உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, அரசியல் அதிகாரத்தில் வலிமை பெற விரும்புகிறது.
ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும், அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுப்படுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.
தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடனும், நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்ற, நேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள், இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் டாக்டர் கலைஞரின் தலைமையில் திமுக, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சியினர் முதல் நிலை வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.
எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும், புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.
·         தேசத்தை காப்போம்
ஐயா பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பெருந்தலைவர் காமராஜ், ஐயா முத்துராமலிங்க தேவர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் ‘வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்யும் யுக்திகளோடு புறப்பட்டிருக்கிறோம்.
எமது அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விதைகளைத் தூவுகிறோம். நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.
நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறவில்லை. ஆனால், நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்தி சொல்கிறோம்.
எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டும் என்பதற்காக, கொள்கைப்பிடிப்புடனும்: லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
(கட்டுரையாளர் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராவார். மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியரும் கூட.)



சனி, 12 ஏப்ரல், 2014

"தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி வழங்குவது மெழுகுவர்த்தி. அதேபோல், நமது வேட்பாளர் ஐதர்அலியும் உங்களுக்காக உழைப்பார்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


 
தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது : மயிலாடுதுறையில் கருணாநிதி 'சவால்'

மயிலாடுதுறை : ''தி.மு.க., தலைமையிலான ஐனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க., தலையிைலான, ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஐதர்அலியை ஆதரித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சூரியன் இல்லை என்றாலும், ஒன்றிற்கு இரண்டாக வெளிச்சம் தரக்கூடிய மெழுகுவர்த்தி சின்னம் மனிதநேய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

"
தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி வழங்குவது மெழுகுவர்த்தி. அதேபோல், நமது வேட்பாளர் ஐதர்அலியும் உங்களுக்காக உழைப்பார்."

தி.மு.க., இஸ்லாமியர்கள் இடையிலான நட்பு தேர்தலுக்காக ஏற்பட்டது என நினைக்கக்கூடாது. பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல் தி.மு.க., இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது. இது கூடா நட்பு அல்ல, கூடும் நட்பு.இந்த கூட்டணியை உடைக்க ஜெயலலிதா முயற்சிக்கக் கூடும். ஆனால், தி.மு.க., வினரின் உறுதியையும், உடன்பாட்டையும் யாராலும் உடைக்க முடியாது.


தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது.'தனியாக சாதிப்பவன் நான்' என நான் மார்தட்டிக் கொள்ளவும் இல்லை, அரைகூவலிடவும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

 
தமிழ் சமுதாயத்தை வாழவைக்க உருவான இயக்கம் தி.மு.க., :திருவாரூரில், நாகை தொகுதி தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: 'காவிரி பிரச்னையில் துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை' என தஞ்சை மண்ணில், என்னை பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார்.

துரும்பை கிள்ளிப்போட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா. கர்நாடக அரசு பிடிவாத்தில் உள்ளது. நான் பிறந்த ஆண்டில் இருந்து இந்த பிரச்னை பேசப்படுகிறது. காவிரி பிரிச்னை பொதுவானது. இதை யார் தீர்த்தால் என்ன. தி.மு.க, அ.தி.மு.க., இருவரும் சேர்ந்து கூட பிரச்னையை தீர்க்கலாம். வீடு தீப்பற்றினால் அணைக்க தான் வேண்டும். யார் அணைப்பது என்ற போட்டி கூடாது. இதில், கருணாநிதி ஜெயிப்பதா அல்லது ஜெயலலிதா ஜெயிப்பதா என்ற போட்டி அவசியமில்லை. நீங்கள் ஜெயித்தாகவே இருக்கட்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் மட்டுமே தமிழர்களுக்காக கவலைப்படுவது போலவும், தமிழக மக்களைப் பற்றி எனக்கு கவலையில்லை என்பது போலவும் பேசிவருகிறார். தமிழ் சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும் என, உருவான இயக்கம்தான் தி.மு.க 'இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வராதது ஏன்?' என, ஜெயலலிதா கேட்கிறார். 1956ம் ஆண்டில், இலங்கை தமிழர் விடுதலைக்காக போராடி, அவர்களுக்காக தீர்மானம் கொண்டு வந்தது இந்த கருணாநிதி தான்.

 

தி.மு.க., பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. பொய் பேசுபவர் யார் என மக்களுக்கு தெரியும். முதல்வர் பதவிக்கு மாத சம்பளம் ஒரு ரூபாய் வாங்கினார். மகிழ்ச்சி, பிறகு எப்படி வந்தது பல கோடி ரூபாய்.நாம் எப்படி பட்ட முதல்வரை பெற்றுள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள பெங்களுரு தனி கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு ஒன்றே போதும். தமிழர்கள் ஏமார்ந்தவர்கள் அல்ல,


ஆளும் கட்சி என்ற பெயரில் அம்மையார் ஏமாற்றுகிறார். இந்தியாவில் அமைய உள்ள அரசியல் அங்கமாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். ஆனால், தமிழர்களை பங்கம் செய்ய வேண்டாம் என, எச்சரிக்கிறேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க., விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.