23 கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் – மோடிஜியின் புதிய கல்வி மந்திரி….!!!
திருவாளர் ராம்ஷங்கர் கதேரியா – 2009ஆம் ஆண்டு முதல் ஆக்ராவைச் சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர். எப்போதோ இவர் கல்லூரியில் பேராசிரியராக (லெக்சரர்..? ) இருந்தாராம்.
அதனால் தன்னை இவர் ப்ரொபசர் கதேரியா என்றே அழைத்துக் கொள்கிறார்.
புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 21 மந்திரிகளில் இவர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மிக முக்கியமான மனிதர். எவ்வளவு முக்கியம் என்றால் …. இவர் மீது தான் அதிகபட்சமாக - 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பாஜக, இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் ரீதியாக போடப்பட்டவை என்று கூறினாலும், குறைந்த பட்சம் இரண்டு வழக்குகள் வித்தியாசமானவை - கொலை முயற்சி, மற்றும் மோசடி சம்பந்தப்பட்டவை.
இன்று காலையிலிருந்து இவர் பெயர் டெல்லி தொலைக்காட்சி சேனல்களில் முழங்கப்படுகிறது….. தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளின் மார்க் ஷீட்டில் இவர் forgery செய்து விட்டதாக ஒரு வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் முன் வந்து, அது குறித்த விசாரணை ஆக்ரா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வருகிற 26ந்தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்….!!!
அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்….!!!
இப்பேற்பட்ட பெருமைகளைக் கொண்ட ஒருவரை மத்திய அரசின் கல்வி மந்திரியாக மோடிஜி நியமித்திருப்பது – அவருக்கும், இந்த நாட்டு மக்களாகிய நமக்கும் எப்பேற்பட்ட பெருமை சேர்க்கும் விஷயம் ….!!!!
சம்மனை வாங்கினால் தானே வழக்கு கணக்கில் சேரும்….?
இங்கு வித்தியாசமான ஒரு மோடிஜியின் மந்திரி - ராஜஸ்தானைச் சேர்ந்த நிகால்சந்த் மேஹ்வால் என்பவர் மீது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் ராஜஸ்தான் கோர்ட் ஒன்று சம்மன் வெளியிட்டிருக்கிறது. ஆனால் டெல்லியில் மத்திய மந்திரியாக இருக்கும் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று ராஜஸ்தான் போலீஸ் கோர்ட்டில் சொல்லி விட்டது.
Association for Democratic Reforms (ADR) – என்கிற பெயரில் பொதுநல அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அரசியல்வாதிகள் பற்றிய பல உண்மைகளை ஆதாரபூர்வமாக சேகரித்து, அவ்வப்போது வெளியிடுவது அது செய்து வரும் பொதுநலப் பணிகளில் ஒன்று.
அது அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் சில - மோடிஜியின் அமைச்சரவையில் உள்ள மொத்தம் 66 மந்திரிகளில் – 59 பேர் அதாவது 92 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
அதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களில் ஒருவரான திருவாளர் மகேஷ் சர்மா என்பவரின் சொத்து மதிப்பு 2009-ல் 15.85 கோடி ரூபாயாக இருந்தது, 2014-ல் 47.37 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறதாம்…. 5 வருடங்களில் 3 மடங்கு உயர்வு – இவர் அரசியலைத்தவிர வேறு தொழில் எதுவும் செய்வதாகவும் தெரியவில்லை ….!!!
மத்திய அமைச்சர்களின் ஜாதகங்களை முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, Association for Democratic Reforms (ADR) சொல்கிறது -
மொத்தம் உள்ள 66 மத்திய அமைச்சர்களில், 20 பேர் – தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, அவர்களே தேர்தல் கமிஷனுக்கு கொடுத்த பிரமாண பத்திரங்களில் கூறி இருக்கிறார்களாம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து, ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய அரசியலை சுத்தப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னர் மோடிஜி -மாநிலம் மாநிலமாகச் சென்று வாக்குறுதி கொடுத்து விட்டு வந்தார்….
அந்த வாக்குறுதிக்கும் இவரது அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை போலிருக்கிறது ….!!!
பாரதியின் பாடல் வரிகள் இங்கு வேறு அர்த்தத்தில் தோன்றுகிறது -
”இங்கிவரை யாம் பெறவே -என்ன தவம் செய்து விட்டோம்……!!!”
நன்றி : விமரிசனம் - காவிரிமைந்தன்