சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்!
இந்த விவகாரம் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.
தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.
தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, அவரது கணவர் கிரிஷ்ணப்பா, இத்தம்பதியினரின் மகள்களான சௌமியா, ஷில்பா, மேகனா மற்றும் மருமகன் சுதாகர் ஆகியோரின் மீது கிரிமினல் சதி புரிந்தது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிந்திருக்கிறார் நீலகண்டாச்சாரி. மேலும் இவர்கள் சங்கரமடத்திற்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை தம்மிடமிருந்து மறைத்துள்ளதாகவும், சங்கர மடத்தைப் பயன்படுத்தி கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குற்றச்சாட்டில் பதிந்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட விஜயநகர காவல் நிலையம், ஜெகத்து குருவே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விசாரணைக்காக கர்நாடக மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகாரை அனுப்பி வைத்தது. புகாரின் மேல் விசாரணையைத் துவங்கிய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஜெனிசிஸ் சார்பில் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மடத்தின் சார்பாக சிரீதரன் என்பவரை நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் கொண்டவராக நியமித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி ஜெனிசிஸ் சார்பில் மடத்திற்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றில் மடத்திற்கு உட்பட்ட ஐந்து அறக்கட்டளைகளுக்கு ஜெனிசிஸ் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளின் வழியே 3,992 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பாக இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள சிரீதரன், இந்த தொகையைப் பெற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தி அளித்த கடிதமும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த விவரங்களோடு மடத்தின் கணக்குத் தணிக்கை அலுவலரை அணுகிய குற்றப் புலனாய்வுத் துறை, மடத்திற்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் கிடைத்த நன்கொடை மற்றும் நிதி விவரங்களை கேட்டிருக்கிறது. மடத்தின் சார்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் வெறும் பதினைந்து கோடிகளுக்கு மட்டுமே முறையான கணக்குகள் உள்ளன. ஜெனிசிஸ் நிறுவனத் தரப்பின் படி, அவர்கள் தமக்கு மடத்திடம் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 2.5 சதவீத கழிவுத் தொகையே இன்னமும் வர வேண்டியுள்ளது என்பது தான்.
சிரீதரனும் விசாரணையில் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தான் ஜெனிசிஸ் நிறுவனத்தோடு சங்கர மடம் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தவிற பிற விவரங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றுள்ளார். 2011-12 காலகட்டத்தில் சந்திரசேகர் குரு என்பவரின் தலைமையில் சங்கர மடத்திற்குச் சென்றதாகவும், அப்போது மடத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து நடந்த விவாதங்களில் தான் பங்கேற்கவில்லை, தன்னை அறைக்கு வெளியே செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த அளவில் தற்போது விவகாரம் விசாரணையில் உள்ளது. பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை மடத்தின் குறிப்பிட்ட ஐந்து அறக்கட்டளைகளின் மூலம் கருப்புப் பண சுழற்சி நடந்திருக்கிறது என்ற கோணத்தில் மேல் விசாரணை செய்து வருகிறது.
என்னது காஞ்சி சங்கர மடத்தில் கருப்பு பணமா என்று யாராவது அதிர்ச்சி அடைய முடியுமா? லோககுரு கம்பெனிக்கு ஒரு கிரிமினல் கூட்டத்தை ஜமுக்காளத்தைப் போட்டு வடித்து எடுத்தாலும் உலகில் வேறெங்கும் கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் யாராவது மறுக்க முடியுமா?
உள்ளே நடந்த ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஒரே ‘பாவ’த்துக்காக சங்கர ராமனை சாட்சாத் அந்த ’பகவானின்’ சந்நிதியில் ’பகவானின் கண்’ முன்னே போட்டுத் தள்ளியதாகட்டும், சாட்சிகளை காசு கொடுத்து பிறழ் சாட்சிகளாக மாற்றிய சாமர்த்தியமாகட்டும், நீதிபதியிடமே டீலிங் பேசிய திமிராகட்டும் – ஜெகத்து குரு உலகத்து ஜெகத்தின் கிரிமினல்கள் அனைவருக்குமே ஆதி குரு என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
கும்பகோண மடத்தை சங்கர மடமாக மாற்ற வரலாற்றையே போர்ஜரி செய்து மாற்றியதாகட்டும், பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டைப் பஞ்சாயத்து தரகனாக செயல்படுவதாகட்டும் இந்த கும்பலை மிஞ்சிய திருட்டு கும்பலை பார்ப்பது கடினம்.
ஆனால், இந்த மொத்த விவகாரமும் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன. அது போல தேசிய, பிராந்திய என்ற வேறுபாடுமில்லை.
இதே காலகட்டத்தில் 2ஜி வழக்கில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கனிமொழியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி தேசிய ஊடகத்திலிருந்து பா.திருமாவேலனின் விகடன் பத்திரிகை வரை மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள். ஊழலுக்கு எதிரான இந்த போர்முரசு சங்கராச்சாரி (அ) சுப்புனி குறித்து வெம்பிய முரசாக ஏன் போங்காட்டம் ஆட வேண்டும்?
சங்கர மடம் காசு கொடுத்து தான் இந்த மௌனத்தை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை, பார்ப்பன நலன் என்று வந்தால் யாரும் சொல்லாமலே பொத்திக் கொள்ளும் வாய்கள் தான் இவை.
சாராயம் காய்ச்சி விற்பதெல்லாம் ’ராயப்பன்களின்’ வேலையாக பதிவாகியிருக்கும் பொதுபுத்தியின் முன் சோ ராமசாமி சாராயக் கம்பெனியின் தலைமைப் பதவியில் இருந்தார் என்கிற செய்தி நுழைவதில்லை.
இந்த இலட்சணத்தில் சுவிஸ் வங்கியின் பாதுகாப்பறையில் இருக்கும் பல பல பலான கோடி கோடி பணத்தை ஸ்கார்பியோ காரில் பறந்து சென்று மோடி மீட்டு வருவார் என காமிக்ஸ் கதை காட்டிய கனவான்களை நினைத்துப் பாருங்கள்! ஸ்கார்பியோ கார் தயாராகும் பெங்களூருவிலேயே 4000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு ஒன்னும் தெரியாத அம்பி மாதிரி சங்கரமடத்தில் நெய் பொங்கலை மொக்கி விட்டு ஒரு பெருச்சாளி இருக்கிறதே? அது குறித்து தமிழிசை தவிலோசை போல பேசுவாரா? இல கணேசனோ, பொன்னாரோ பொங்கி எழுவார்களா?
அவ்வளவு ஏன், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட ஜெயேந்திரனுக்கு பார்டிகார்டாகவும், பிரச்சார பீரங்கியாகவும் பேசிய கூட்டமல்லவா இது!
சமூகத்தை ஏற்றத்தாழ்வுடன் கூடிய படிநிலை அமைப்பாக நிலைநிறுத்திய பார்ப்பனியம் தன்னளவிலேயே குற்றத் தன்மையுடையது தான் – அப்படியிருக்க நடைமுறையில் அதன் இருப்பை உத்திரவாதப்படுத்தும் சங்கர மடம் இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, இதற்கு மேல் பஞ்சமா பாதகங்களையும் செய்யாவிட்டால்தான் அதிசயம்!
இந்தக் குற்றக் கும்பலையும், அதன் பகிரங்கமான சங்கர மட கம்பெனி ஆபிசையும் இழுத்து மூடுவது எப்போது?
– தமிழரசன்
http://www.vinavu.com/2014/11/13/kanchi-mutt-black-money-scandal