அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 14 ஜூன், 2013

நீ தேடுவது உனக்கான ஒரு கண்குளிர்ச்சியை! நீ தேடுவது “உன் வீட்டு எஜமானியை”

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனது அன்பு சகோதரர்களே!

உங்கள் வாழ்வின் பொக்கிஷம் எது என்பதை அறிவீர்களா? அது தங்கமா? வெள்ளியா? அல்லது சொத்துக்களா? நிச்சயமாக இல்லை. இவற்றுக்கப்பால் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷம் இருக்கிறது.

நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபியவர்கள் உமர் (றழி) அவர்களிடம் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் பெற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பொக்கிஷம் எது என்பதைக் கூறட்டுமா? அதுதான் ஸாலிஹான மனைவி. அவளைப் பார்த்தாலேயே சந்தோஷம் ஏற்படும். கட்டளையிட்டால் முழுமையாகக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத சந்தர்ப்பங்களில் அவளைப் பாதுகாப்பாள் (அபூதாவூத்).

ஸாலிஹான மனைவி, அவள்தான் ஓர் ஆணின் பொக்கிஷம். மனைவி ஸாலிஹானவளாக உள்ளபோதுதான் அவள் பொக்கிஷமாய் இருப்பான். பொக்கிஷம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய, பெறுமதிமிக்க ஒரு பொருள். அது அவளது வாழ்வையே மாற்றிவிடக்கூடியது. மனைவியும் அத்தகையவள் தான். பார்வையிலேயே சந்தோஷமளிப்பவள், கட்டுப்படுபவள், உடனில்லாதபோதும் அவளைநெஞ்சினில் பூட்டிப் பாதுகாப்பவள்.

சகோதரர்களே!

பொக்கிஷத்தை இலகுவாகக் கண்டுகொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. கடுமையான உழைப்பு, கவனமான தேடல் மூலமாகத்தான் கண்டுகொள்ள முடியும். இங்குதான் மிகச் சரியான தெரிவு அவசியப்படுகிறது. தெரிவு சரியாக அமைகிறபோதுதான் உனக்கான உள்ளம், உனக்கான சந்தோஷம், உனக்காக வாழ்பவள் கிடைப்பாள். அவள்தான் பொக்கிஷம்.



சகோதரனே!

நீ தேடுவது உனக்கான ஒரு வீட்டையா? இல்லையல்லவா? நீ ஏற்கனவே ஒரு வீட்டில்தான் வாழ்கிறாய். அங்கு உனக்கு உறவுகள் இருக்கின்றன. நீ தேடுவது உனக்கு பணிவிடைகள் செய்வதற்குரிய ஒருவரையா? நிச்சயமாக இல்லை. ஏற்கனவே அதற்காகப் பலர் இருக்கிறார்கள்.

உனது தேடல் இதுவல்ல. நீ தேடுவது ஒரு மனைவியை உனக்கான ஒரு மனைவியை அவள் யார்? அந்தத் தேடல் என்ன?

நீண்ட பயணத்திற்குப்பின் நங்கூரமிட ஒரு கரையைத் தேடுகிறாயா? சுட்டெரிக்கும் பாலைவனத்தில் குளிர்ந்த நீர், நிழல் தரும் மரம், ஓ... ஒரு சோலையைத் தேடுகிறாயா?

உனது சுமைகளை இறக்கிவைக்க ஒரு தோள். உனது கவலைகளை சுமந்துகொள்ள ஓர் இதயம். இதுதான் உனது தேவையல்லவா? இது அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சி.

அவன் கூறுகிறான்: “அவனது அத்தாட்சிகளில் ஒன்று, உங்களிலிருந்தே உங்களுக்கான சோடியைப் படைத்தான். நீங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காக உங்கள் இருவருக்கும் மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்...” (அர்ரூம் - 21)

நீ தேடுவது அமைதியை!

வாழ்வில் பாதைகள் சிதறும்போது, பாதங்கள் தடுமாறும்போது, எதிர்காலம் ஒளியற்றுப் போகும்போது உள்ளத்திற்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதனை உடனிருக்கும் துணைதான் உன்னதமாய் வழங்க முடியும்.

நீ தேடுவது கண்குளிர்ச்சியை!

ரஹ்மானின் அடியார்களது துஆவைப் பாருங்கள். “அவர்கள் கூறுவார்கள் எமது இரட்சகனே! எமது மனைவிமார்கள் மூலமும் பிள்ளைகள் மூலமும் எமக்குக் கண்குளிர்ச்சியை அருள்வாயாக. இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாக எம்மை ஆக்குவாயாக. (அல்புர்கான் - 74).

கண்குளிர்ச்சி என்பது ஓய்வு. கண்குளிர்ச்சி என்பது வாழ்வும் நேரமும் ஒழுங்குபடுத்தப்படுதல். கண்குளிர்ச்சி என்பது மகிழ்ச்சி.

மனைவி, பிள்ளைகள், குடும்ப வாழ்க்கை என்பது ஓய்வும் சந்தோஷமும், வாழ்வின் நடவடிக்கைகளும் நேரங்களும் வெற்றியை நோக்கி ஒழுங்குபடுத்தப்படுதலும் ஆகும். இதனால்தான் அந்த ரஹ்மானின் அடியார்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். சமூகத்திற்குத் தலைமை வழங்குபவனின் குடும்பவாழ்க்கை கண்குளிர்ச்சியாய்க் காணப்படல் வேண்டும்.

நீ தேடுவது “உன் வீட்டு எஜமானியை”

நபியவர்கள் கூறினார்கள்: “பெண் தனது கணவனின் வீட்டில் எஜமானியாவாள், நிர்வாகியாவாள், அவளது நிர்வாகத்திற்கு அவளே பொறுப்பாவாள்” (ஸஹீஹுல் புகாரீ)

அவள் உன் வீட்டு எஜமானி. உனது அனைத்து விடயங்களையும் அவள்தான் நிர்வகிக்கிறாள். உனது நேரங்கள், உனது தேவைகள், உனது நலன்கள், உனது வீடு அனைத்தையும் நிர்வகிப்பவள் அவள்தான். எனவே, உன் வீட்டுப் பொறுப்புகளை சுமக்கத் தகுதியான ஒருத்தியே உனது தேடல்.

நீ தேடுவது “ஒரு பாதுகாவலரை”

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: “ஸாலிஹான பெண்கள், அல்லாஹ்வுக்கு முழுமையாய் தன்னை அர்ப்பணித்து இபாதத்தில் ஈடுபடுவர். அல்லாஹ் பாதுகாத்த மறைவான விடயங்களை எப்பொழுதும் காப்பவர்களாக இருப்பார்கள்” (அந்நிஸா - 34).

நபியவர்கள், “ஸாலிஹான மனைவி என்பவள்... நீ இல்லாத சமயத்தில் உனது மானத்தையும் செல்வத்தையும் காப்பவள்” என்று தெரிவித்தார்கள். (சுனனுந் நஸாஈ)

ஒரு விடயம் புரிகிறது. பாதுகாத்தல் என்பது சொத்துகளைப் பாதுகாத்தல் மட்டுமல்லாது, ஆணுடைய மானத்தை, கண்ணியத்தை, கௌரவத்தைப் பாதுகாத்தல் என்பவையும் அடங்கும். இத்தகைய ஒரு பாதுகாவலர் அமைகிறபோது உள்ளத்தில் எவ்வளவு நிம்மதி இருக்கும்...?

நீ தேடுவது “ஓர் அன்பானவளை”

அல்குர்ஆன் கூறுகின்றது: “உங்கள் இருவருக்கும் இடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி வைத்தான்” (அர்ரூம் - 21)

நபியவர்கள் கூறினார்கள்: “மிகவும் அன்பு செலுத்தக்கூடியவளை, அதிக பிள்ளைகளைப் பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்யுங்கள்...”

அன்பானவள் உனது எல்லா நிலைகளிலும் உன்னை அரவணைப்பவள். அவள்தான் உன்னையும் உனது வாழ்வையும் உனது எதிர்காலத்தையும் உனது ஆசைகளையும் கனவுகளையும், உனது சிந்தனைகளையும் நேசிப்பவள். இவற்றுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துபவள். உனது வாழ்வை பொறுப்புள்ளதாய் மாற்றுபவள். அவள்தான் உனது தேடல்.

நீ தேடுவது “அன்பாய் அடிபணிபவளை”

சொர்க்கத்தில் மனிதனுக்குத் தயார்படுத்தப்பட்டிருக்கும் பெண் பற்றி அல்குர்ஆன் கூறும்போது,

“அவர்களை நாம் முன்மாதிரியின்றி படைத்தோம். அவர்கள் கன்னிப் பெண்கள், அவர்கள் கணவனுக்கு அன்போடு கட்டுப்படுபவர்கள். அவர்கள் சமவயதினர்கள்” (அல்வாகிஆ – 35 - 37)

அன்போடு கட்டுப்படுபவள்; பயத்தினால் கட்டுப்படுபவளல்ல. வெறுப்போடு கட்டுப்படுபவளல்ல. சம்பிரதாயபூர்வமாகக் கட்டுப்படுபவளல்ல. அவள் கணவனை நேசிப்பவள். அவளை எப்பொழுதும் நெருங்கிநிற்பவள். அவன் கோபப்பட்டால் நீங்கள் திருப்தியுடன் மன்னிக்காதவரை என் கண்கள் தூங்கமாட்டாது என்று சொல்பவள். தனது நெஞ்சிலும் சிந்தனையிலும் அவனை மாத்திரம் சுமப்பவள். இப்பொழுது அவனது கட்டளை வந்தால், அந்தக் கட்டளைக்கு முன்னால் அவள் எப்படி இருப்பாள்? விருப்பத்துடன் கட்டுப்படுவாள். கட்டுப்பாட்டில் அன்பே பிரதிபலிக்கும். இத்தகையவள் மூலம்தான் உனதுவாழ்வின் சந்தோஷம் முழுமையடைகிறது.

சந்தன வியாபாரியா? இரும்பு உலை ஊதுபவனா?

சகோதரிகளே!

உங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் நீண்டது. அதில் உடன் வரக்கூடிய தோழன் யார்? அவனைத் தெரிவு செய்துவிட்டீர்களா? அவன் சந்தன வியாபாரியா? அல்லது இரும்பு உலை ஊதுபவனா?

நபியவர்கள் கூறிய உதாரணம் உங்களுக்கும் பொருந்தும். “நல்ல தோழனுக்கும் மோசமான தோழனுக்கும் உரிய உதாரணம் சந்தன வியாபாரிக்கும், இரும்பு உலை ஊதுபவனுக்கும் ஒப்பானதாகும். சந்தன வியாபாரி, சந்தனத்தை உனக்குத் தரலாம் அல்லது உனக்கு விற்பனை செய்யலாம் அல்லது அதன் வாசனையையேனும் நீபெற்றுக்கொள்ளலாம். இரும்பு உலை ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடலாம் அல்லது மோசமான வாசனையை நீ பெற்றுக்கொள்ளலாம்” (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்கள் வாழ்க்கையின் இறுதிவரை வரப்போகும் தோழன் உங்களுக்குப் பயனளிப்பவனாய் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை வாசனையால் நிரப்பிவிடுகின்றவனாய் இருக்க வேண்டும். வாழ்வை எரித்துவிடுகின்றவன் அல்லன். அதனை துர்நாற்றத்தால் நிரப்பிவிடுபவன் அல்லன்.

எனவே, மிகச் சரியான தெரிவு முக்கியமானது. வாழ்க்கையின் மிக முக்கியமான தீர்மானம் இது.
சகோதரியே! உன்னையே நீ கேட்டுப் பார்த்துக்கொள்!

எனது வாழ்வின் தோழன் யார்?

எனது வாழ்வில் மனம் பரப்பப்போகின்றவன் யார்?

எனது அன்புப் பிரவாகத்தில் நனையப்போகும் அந்த மனிதன் யார்?

எனது கவலைகளையெல்லாம் இறக்கிவைப்பதற்குரிய அந்த இதயம் எது?

எனது பெண்மையின் இதழ்களை முகர்ந்து பார்க்க நான் யாரை அனுமதிக்கப்போகிறேன்?

எனது வாழ்க்கைப் பாதைகளில், ஒளியேற்றி வழிகாட்டும் அந்த ஆலோசகன் யார்?

எனது வாழ்வின் கொடியைக் கையளிக்கப்போகும் அந்தத் தளபதி யார்?

என்னை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்லும் அந்த நம்பிக்கையாளன் யார்?

அவனை அல்லது அவளைத் தேடிய ஒரு பயணத்தைத்தான் நாங்கள் போக இருக்கிறோம்.





~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~


~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
http://tmmkalkhobar.blogspot.com/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~