அன்பு உறவுகளுக்கு..!
கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்
கர்நாடகா மாநிலம் கோலாரில் சென்ற ஜனவரி மாதக் கடைசியில் போலீஸ் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் கூட்டத்திலிருந்து திடீரென்று கூச்சலிட்டவாறு ‘எங்களை செத்துப்போக அனுமதியுங்கள்’ என்று கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர்.
கோலார் தாலுகா சியனுபோஹனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, அவருடைய துணைவியார் ரத்னம்மா. இவர்களுடைய குழந்தைகள் ஆகாஷ், அனுசிறீ, அமலசிறீ ஆகியோருடன் சில உறவினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
கூட்டத்தில் ரத்னம்மா அழுதவாறு “எங்களுடைய ஊரில் சாதி இந்துக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களை துன்புறுத்தி வருகின்றனர், எங்களை பல்வேறு வித தண்டனைகளுக்குள்ளாக்கி வருகின்றனர், இனி அந்த தொல்லைகளை எங்களால் தாங்க முடியாது, அதிகாரிகளிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்கு மரணம் தான் ஒரே தீர்வு. அதனால் எங்களை சாக அனுமதியுங்கள்” என்று முறையிட்டுள்ளார்.
சங்கரப்பா குடும்பத்தினர் சாதி இந்துக்களுக்கு பயந்துகொண்டு தலைமறைவாக இருப்பதால் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. இப்பிரச்சினையை விசாரித்த சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரக அதிகாரி தனது அறிக்கையில் சங்கரப்பா குடும்பம் சாதி இந்துக்களால் துன்புறுத்தப்பட்டிருப்பதையும், சங்கரப்பா குடும்பத்தை பாதுகாக்காமல் குற்றவாளிகளான சாதிவெறியர்களுக்கு போலீசு துணைபோயிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இருந்தாலும் இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்தாலாவது இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்றெண்ணியே கூட்டத்திற்கு வந்ததாக கூறுகிறார் சங்கரப்பா.
இந்த சம்பவத்தை போலவே, பதினைந்து நாட்களுக்கு முன்பு இதே கோலார் மாவட்டத்தில் உள்ள கக்கனஹள்ளி என்கிற கிராமத்தில் உள்ள நான்கு தலித் குடும்பங்களை சாதி இந்துக்கள் ஊர்விலக்கம் செய்துள்ளனர். இக்கிராமத்தில் மொத்தம் பதினாறு தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. சங்கராந்தி பண்டிகை கொண்டாடியதையும், கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கான வேலைக்கு ஒரு தலித் குடும்பத்திலிருந்து விண்ணப்பித்திருந்ததையும் கண்டித்து தான் ஆதிக்க சாதிகள் தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்திருக்கின்றனர்.
இந்த குடும்பங்களுக்கு ஊரில் உள்ள கடைக்காரர்கள் எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது. தலித் குடும்பங்கள் மாலை நேரத்தில் தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கிற நிபந்தனை போடப்பட்டுள்ளது.
இந்த அநீதியை எதிர்த்து தலித் மக்கள் போலீசை அணுகினர். யார் வந்தாலும் ஊர்விலக்கம் ஜனவரி 22 முதல் நீடிக்கும் என்று ஆதிக்க சாதிகள் திமிராக அறிவித்தன. ஆனால் போலீசு வந்து விசாரித்த போது இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று கூறி நழுவிக் கொண்டன.
இந்த பிரச்சினைகளில் வழக்கு விசாரணை ஒரு பக்கம் என்றால் அரசும் அதிகாரிகளும் சாதிவெறியர்களை கைது செய்யாமல் ஒடுக்குமுறைகளை ஏற்க வைக்கும் வேலைகளை சமரசம் என்கிற பெயரில் செய்துகொண்டிருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உலகத்திலேயே இந்த நாடு தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் ‘தேச பக்தர்கள்’, இத்தகைய ஜனநாயக மறுப்பு காட்டுமிராண்டித்தனங்களை கண்டு கொள்வதில்லை. ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகில் ஏறிக் கொண்டுதான் இவர்களுடைய ஜனநாயகம் உலாவருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த சமூக அமைப்பால் நீதியையோ பாதுகாப்பையோ என்றும் வழங்க முடியாது என்பதையே இந்த செய்தி உணர்த்துகிறது. அதிகார வர்க்கம், ஊடகங்கள், சட்டம், காவல்துறை, நீதிமன்றங்கள் என்று அனைத்துமே சாதிவெறி, மதவெறி சக்திகளின் நேரடி மறைமுக கூட்டாளிகளாகவே செயல்படுகின்றன.
எனவே இந்த சுரண்டல் சமூக அமைப்பை வேரோடு பிடுங்கி எறிவது மட்டுமே உழைக்கும் மக்களுக்கும் அவர்களில் ஒரு அங்கமான தலித் மக்களின் விடுதலைக்கும் ஒரே வழியாக இருக்க முடியும்.