அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 15 மே, 2013

ஆழம் இதழுக்கான பேரா. முனைவர். ஜவாஹிருல்லாஹ் M.L.A பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆழம் இதழில் பேரா. முனைவர். ஜவாஹிருல்லாஹ் M.L.A பேட்டி






இஸ்லாமிய சமூகத்தினரோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்களில் தனது கருத்தை தொடர்ச்சியாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தி விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு கணிசமானது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர். தமிழகத்தில் முஸ்லிம்களின் நிலை, இடஒதுக்கீடு, விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை, அப்சல் குரு என்று தற்போது விவாதத்தில் இருக்கும் சில முக்கிய நிகழ்வுகள்மீதான தனது பார்வையை ஆழம் இதழுக்காக
ஆர். முத்துக்குமாருடன் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

சுதந்தர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட்டதற்கான காரணத்துடன் அவருடைய உரையாடல் தொடங்குகிறது.

இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட காந்தியின் அகிம்சைப் போராட்டம் தொடங்கி நேதாஜியின் ஆயுதப் போராட்டம் வரை அனைத்திலுமே முஸ்லிம்கள் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகி, அதை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், ‘நாங்கள் மதச்சார்பற்ற தேசத்திலேயே வாழ விரும்புகிறோம்’ என்று சொன்னவர்கள் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள். போதாக்குறைக்கு, இந்தியா இரண்டாகத் துண்டாடப்படுவதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற பழிச்சொல்லை வேறு சுமக்கவேண்டியிருந்தது.


இந்தியா துண்டாடப்பட்டதற்கு ஜின்னா மட்டும் காரணமல்ல, நேருவும் பட்டேலும்கூட காரணமாக இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் சமீப காலமாக வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் தங்களுக்குள்ள உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கு தனியான அரசியல் இயக்கம் தேவை என்று நினைத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முதல் பொதுத்தேர்தலின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு பத்து நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருவதாகச் சொன்னார் நேரு. காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடவும் அழைப்புவிடுத்தார். ஆனால் அதனை வேண்டாம் என்று மறுத்து, தனி அடையாளத்துடன் இயங்குவோம் என்று சொன்னவர் காயிதே மில்லத்.

ஆனால் காயிதே மில்லத் காலத்துக்குப் பிறகு முஸ்லிம் இயக்கங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வலுவான சக்தியாக உருப்பெறவில்லையே?

1967ல் நடந்த பொதுத்தேர்தலில் நாத்திகரான அண்ணாதுரையின் திமுகவுக்கும் ஆத்திகரான ராஜாஜியின் சுதந்தரா கட்சிக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர் காயிதே மில்லத். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கியவரும் அவரே. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இன்றுவரை ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆனால் காயிதே மில்லத்தின் காலத்துக்குப் பிறகு முஸ்லிம் லீக் தனது சுய அடையாளத்தை இழந்துவிட்டது. திமுகவின் சிறுபான்மைப் பிரிவாகச் செயல்படும் அளவுக்கு மாறிவிட்டது. அதேசமயம், அப்துல் சமது, அப்துல் லத்தீப் இருவரும் முஸ்லிம் மக்களின் மதிப்பைப் பெற்றவர் களாக, பொதுத்தளத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுகவின் உருவாக்கத்துப் பிறகு அப்துல் சமது எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்தார். அதனை விரும்பாத அப்துல் லத்தீப் இந்திய தேசிய லீக்கைத் தொடங்கினார். இரண்டு தலைவர்களும் தத்தமது இயக்கங்களை நடத்தியபோதும், நாம் தனிக்கட்சி நடத்துகிறோம், நமக்கென்று தனியான அடையாளத்தைப் பேணவேண்டும் என்ற விஷயத்தில் தவறிவிட்டார்கள். அதன் காரணமாக, முஸ்லிம் சமுதாயத்துக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. அதுதான் வலுவான சக்தியாக உருப்பெறுவதைத் தடுத்துவிட்டது.


முஸ்லிம் லீக், தேசிய லீக் என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே இயங்கியபோதே வலுவடையாத முஸ்லிம் சக்தி, இருபத்து நான்கு அமைப்புகளாகப் பிரிந்துகிடக்கும்போது எப்படி உருப்பெறும்?

24 அமைப்புகளின் கூட்டமைப்பு என்பது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தொகுப்பல்ல. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், இலக்கிய அமைப்புகள், அறக்கட்டளைகள், உலமாக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரின் கூட்டமைப்பு. தேவர்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு மத்தியிலும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இந்த இடத்தில் எங்களுடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன ஏன் உருவாயின என்பதைச் சொல்லவேண்டியது அவசியம்.

எண்பதுகளின் மத்தியில் பாபர் மசூதி விவகாரம் பெரிய அளவில் வலுக்கத் தொடங்கியபோது இந்து முன்னணியினரும் அதன் தலைவர் ராம. கோபாலன் போன்றவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தினார்கள். அத்தகைய கொதிப்பான சூழ்நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேசிய லீக் போன்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை முழுமையாகச் செய்யவில்லை. அதேபோல, தடா சட்டம் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலையில்கூட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இதனால் முஸ்லிம்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலத்த தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். அப்போது காயம்பட்ட புண்களுக்கு மருந்துபோடும் அரசியல் நடவடிக்கைகளைக்கூட முஸ்லிம் அரசியல் கட்சிகள் எடுக்கவில்லை. இத்தனைக்கும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளோடு நல்ல தொடர்பில் இருந்தன. பழனிபாபா போன்றவர்கள் இந்தப் பிரச்னைகள் பற்றிப் பேசியபோது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் நாதியற்ற முஸ்லிம் மக்களின் நன்மைக்காக, வெகுமக்கள் ஆதரவோடு 1995 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினோம்.


உங்கள் முன்னோடிகளைப் பின்பற்றி நீங்களும் திமுக, அதிமுக என்றுதானே மாறிமாறிச் செயல்படுகிறீர்கள்?

எந்த அணியில் இருக்கிறோம் என்பதைக்காட்டிலும் நம்முடைய கோரிக்கையை எந்த அளவுக்கு வலுவாகவும் ஆட்சியாளர்களுக்குப் புரியும் வகையிலும் எடுத்துவைக்கிறோம் என்பதுதான் முக்கியம். முஸ்லிம்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தமுமுகவைத் தொடங்கிய நாங்கள் தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில்தான் தீவிர கவனம் செலுத்தினோம். காரணம், அப்போது 142 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் போட்டிபோட வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இருந்தனர். அதன் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான முப்பது சதவிகிதத்தில் இருந்து முஸ்லிம்களுக்கென்று தனியே இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோரினோம்.
இந்தக் கோரிக்கையை திமுக, அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் கட்சிகள் எப்பொழுதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை. மாறாக, நாங்கள் அந்தக் கோரிக்கையை எழுப்பியபோது ‘இது போகாத ஊருக்கு வழி’ என்று விமரிசித்தார்கள். ஆனாலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1999ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நல்லக்கண்ணு, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் 2006 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரினோம். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர், அந்தக் கோரிக்கையைத் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சேர்த்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகும் அந்தக் கோரிக்கை அறிவிப்பு அளவிலேயே இருந்தது. ‘தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கான தீர்ப்பு வெளியானபிறகு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு பற்றிப் பரிசீலிக்கலாம்’ என்று சொல்லிவிட்டார் முதல்வர் கலைஞர். ஆனால் அவர் எங்களிடம் வாக்குறுதி கொடுத்தபோதும் அந்த வழக்கு நிலுவையில்தான் இருந்தது. ஆகவே, விரைவில் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தோம்.

அதன் தொடர்ச்சியாக நீதிபதி எம்.எஸ். ஜனார்த்
தனம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அது அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் பிற்படுத்தப்பட்ட கிறித்தவர்களுக்கும் தலா 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தரப்படும் என்று அறிவித்தார் முதல்வர் கலைஞர். இதை அதிகரித்துத் தருமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சமீபகாலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் 2011 தேர்தலின்போது அதைச் செய்துதருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். இதுவிஷயமாக சட்டமன்றத்தில் பேசிய
போது, ‘பொறுமையாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். எதையும் துணிச்சலாகச் செய்துவிடக்கூடிய முதல்வர், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்திலும் துணிச்சலாக முடிவெடுத்து செயல்படுத்துவார் என்று நம்புகிறோம்.
மாநில அரசு இட ஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டபோதும் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யவில்லையே?



மாநில அரசில் இருப்பது போலவே மத்திய அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரினோம். 2004 மக்களவைத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேரளா, கர்நாடகாவில் வழங்கியது போல பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம்’ என்று வாக்குறுதி கொடுத்தது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலும் இந்தக் கோரிக்கை இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மதவழி மற்றும் மொழிவழி
சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் இந்தியா முழுக்கச் சென்று கருத்துகளைக் கேட்டது. தமிழகத்தில் நாங்களும் அந்த ஆணையத்திடம் சாட்சியம் கூறினோம். பணிகளை எல்லாம் முடித்து ஆணையத்தின் அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்தார் ரங்கநாத் மிஸ்ரா. ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியபோது, ‘அது அடுத்த பிரதமர் செய்யவேண்டிய வேலை’ என்று சொல்லி தனது அக்கறையின்மையை வெளிப்படுத்தினார்.

மீண்டும் இதே வாக்குறுதியைக் கொடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றது காங்கிரஸ் கட்சி. அப்போது பிகாரைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ‘இதோ ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை. ஏன் இதனை இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? என்று கேட்டார். அதன்பிறகே அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவருடைய பரிந்துரைகள் மிக எளிமையானவை. மதவழி சிறுபான்மையினருக்கு பதினைந்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் பதினைந்து சதவிகிதத்தில் பத்து சதவிகிதம் முஸ்லிம்களுக்கு. எஞ்சிய ஐந்து சதவிகிதம் இதர பிரிவினருக்கு. இந்தப் பங்கீட்டில் மத்திய அரசுக்குத் தயக்கம் இருக்குமானால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையில் உள்ளபடி 27 சதவிகிதத்தில் எட்டு சதவிகிதம் மதவழி சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அவற்றில் 6.4 சத
விகிதம் முஸ்லிம்களுக்கு. எஞ்சிய சதவிகிதம் இதர பிரிவினருக்கு. ஆனால் அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை.
ரங்கநாத் மிஸ்ரா ஆணைய விவகாரத்தில் மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை காங்கிரஸும் அதன் தலைமையிலான ஐமுகூவும் செய்தனர். உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது முஸ்லிம், சீக்கியர்கள், பார்ஸிகள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் சேர்த்து நான்கு சதவிகித இட ஒதுக்கீடு தரப்படும் என்றது காங்கிரஸ். இதற்கும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த வகையில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் இன்னமும் கிடப்பிலேயே இருக்கின்றன.

விஸ்வரூபம் சர்ச்சைக்கான தொடக்கப்புள்ளி நீங்களா அல்லது கமல்ஹாசனா?


கமல்ஹாசன் தன்னை நாத்திகவாதி என்றும் எந்தப் பக்கமும் சாராமல் மய்யத்தில் இருப்பவன் என்றும் சொல்லிக்கொள்வார். ஆனால் ஹே ராமுக்குப் பிறகு முற்றிலும் வேறு கமல்ஹாசன் இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய ஹே ராம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் முஸ்லிம்கள்மீது திட்டமிட்டுத் தீவிரவாத முத்திரையைக் குத்த முயன்றிருக்கிறார்.




விஸ்வரூபம் படத்தின் டிரைலரைப் பார்த்தபோது அதிலும் விஷமம் இருப்பது உறுதியானது. ஆகவே, முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்தும் விஸ்வரூபம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கோரினோம். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக எங்கள் கூட்டமைப்புக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே இரண்டு சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போது ‘முஸ்லிம்களை இந்தப் படத்தில் உயர்வாகக் காட்டியிருக்கிறேன். அதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுவீர்கள்.’ என்றார் கமல்ஹாசன். படத்தைப் பார்த்தபோது அவர் சொன்னதற்கும் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள்!. இதன்மூலம் கமல்ஹாசன் செய்திருப்பது நம்பிக்கை மோசடி என்றே எங்களுக்குப் பட்டது. அதன்பிறகுதான் சென்னை மாநகர ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோரைத் தொடர்புகொண்டோம்.
விஸ்வரூபம் விவகாரத்தில் டேம் 999 படத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசிடம் சொன்னோம்.



இந்தப் படத்தை 144 CRPCஅடிப்படையில் தமிழக அரசு தடை விதித்தது. கமலஹாசன் அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அரசின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால், தான் செய்தது சரி என்று நிரூபிக்கவேண்டிய நிலைமை தமிழக அரசுக்கு உருவானது.



இந்த இடத்தில் இரண்டு வழக்குகள் பற்றிச் சொல்லவேண்டும். 1989 ஆம் ஆண்டு ஒரே ஒரு கிராமத்திலே திரைப்படம் தொடர்பான ரங்கராஜன் – ஜெகஜீவன்ராம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ‘அச்சு ஊடகத்தைவிட சினிமா வலிமையான



சாதனம். இருட்டான சூழ்நிலையில் ஒலி, ஒளி மற்றும் கருத்துகளின் கலவையாக இருக்கும் திரைப்படம் மக்களை ஒருமுகப்படுத்தி, அவர்களுடைய சிந்தனையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆகவே, திரைப்படத்தை உருவாக்குபவர்கள் மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். அதேபோல, டேம் 999 திரைப்படம் தொடர்பான வழக்கில், ‘படத்துக்குத் தமிழக அரசு தடை விதித்தது சரியே’ என்று 



சொன்ன 
நீதிபதி, ‘மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அல்லது சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் திரைப்படங்களை எடுக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் விஸ்வரூபம் பட விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை எங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது.


ஒரு படைப்பை விமரிசிக்கலாம், தடை செய்ய கோருவது அவருடைய கருத்துரிமைக்கு எதிரான தலையீடு அல்லவா?

விஸ்வரூபம் என்பது வெறும் தமிழ்ப்படம் அல்ல. தமிழ், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மும்மொழித் திரைப்படம். ஆக, இந்த மூன்று மொழிகளும் தெரிந்திருந்தால் மட்டுமே இந்தப் படத்தில் உள்ள விஷமங்களைப் புரிந்துகொள்ளமுடியும். கமல், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா செய்துவரும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் வகையில்தான் முழுக் கதையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கனைப் பற்றியோ, அல் காயிதா, தாலிபன் பற்றியோ படம் எடுப்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. தீவிரவாதச் செயல்களை முஸ்லிம்களின் வழிபாட்டு நடைமுறைகளுடன் இணைத்துக் காட்டுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதிகள் ஒரு பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்கு முன்னால் தொழுகை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று பல பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்வது வழக்கம். இந்நிலையில் இம்மாதிரியான காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவது எத்தனை மோசமான காரியம்!

படத்தில் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஏகே 47, ஏகே 56 என்று ஒவ்வொரு ஆயுதத்தையும் கண்ணைமூடிக்கொண்டு அடையாளம் காட்டுவது போல காட்டியிருக்கிறார்கள். இதை எப்படித் தணிக்கை வாரியம் அனுமதித்தது? அதேபோல சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான முல்லா உமரை இந்தப் படத்தில் ஒமர் என்ற பாத்திரமாகச் சித்திரித்திருக்கிறார் கமல்ஹாசன். அந்த ஒமர் கோவையிலும் மதுரையிலும் ஒரு வருட காலத்துக்குத் தங்கியுள்ளார் என்பதுபோன்ற வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. அப்படி என்றால் மதுரையும் கோவையும் சர்வதேச தீவிரவாதத்துக்கான தளமாகச் செயல்படும் நகரங்கள் என்ற கருத்தை விதைக்கிறாரா கமல்ஹாசன்? தமிழ் பேசும் ஜிஹாதி விலை மதிப்பு மிக்கவர் என்பதுபோல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் தொடர்பு உண்டு என்கிறாரா?

கருத்துரிமை அடிப்படையில் இப்படியான காட்சிகளை கமல்ஹாசன் வைத்தது நியாயம் என்றால் அரசியல் சாசனம் கொடுத்துள்ள அதே கருத்துரிமையின் அடிப்படையில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நியாயமானதே. கருத்துரிமை என்பது தடையில்லா உரிமை அல்ல. படைப்பாளிகள், தணிக்கை வாரியம் உள்ளிட்ட எல்லோருக்குமே சமூகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டும்.
படைப்பாளிகளும் கடமை தவறி, அதைத் தடுக்க வேண்டிய தணிக்கை வாரியமும் கடமை தவறிவிட்ட நிலையில் நாங்கள் களமிறங்கியது நியாயமானது.

கமல்ஹாசன் முஸ்லிம்களைத் தவறாகச் சித்திரிக்கவேண்டிய அவசியம் என்ன?
தனது ஹாலிவுட் கனவை நனவாக்கிக் கொள்வதற்கான முயற்சியாக இதனைச் சொல்லலாம். ஏனென்றால், ஆப்கன் மக்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆளானபோது அமெரிக்காவே அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. அப்படிப்பட்ட அமெரிக்காவையே ஆப்கன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது எது என்பதை விஸ்வரூபம் காட்டவில்லை. மாறாக, அமெரிக்கர்கள் குண்டுவீசும்போது பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்துவிடுவார்கள் என்றொரு வசனம் வருகிறது. அப்படியென்றால் அமெரிக்கா நடத்தும் கார்பெட் பாமிங் என்பது என்ன? ஆக, அமெரிக்காவின் ஏவலாளி என்ற முறையில் அவர்களுக்கான பிரசார ஆவணப்படத்தையே கமல்ஹாசன் எடுத்திருக்கிறார். ஹாசன் என்று பெயர் வைத்ததற்காக அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானத்தையும்மீறி தன்னுடைய அமெரிக்க விசுவாசத்தை வெளிப்படுத்த எங்கள் சமுதாயத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ளாரே…?

அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்படவே தேவையில்லை. அவருடைய வழக்கில் பல குளறுபடிகள் உள்ளன. தவிரவும், தூக்குத் தண்டனையே கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக அணி அமைத்தால் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

நிச்சயம் பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இருக்கமாட்டோம்.

நன்றி: ஆழம்
 



~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
     
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~